தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி – தலைமறைவாக இருந்த பெண் கைது

தலைமறைவாக இருந்த ரம்யாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்துக் கைது செய்தனர்.

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக ரூ.31.88 லட்சம் மோசடி – தலைமறைவாக இருந்த பெண் கைது
மருத்துவ சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்த பெண் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரோஸ்மேரி என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு அவரது மகளுக்கு மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தபோது, தெரிந்த நபர்கள்மூலம் அறிமுகமான அந்தோணிதாஸ் மற்றும் ரம்யா ஆகியோர் மருத்துவக்கல்லூரி மற்றும் சுகாதாரத்துறையில் மிகுந்த செல்வாக்கு உள்ளதாகவும், சுகாதாரத்துறையில் அனைத்து அதிகாரிகளையும் தெரியும் என்றும் அவர்கள்மூலம் மனுதாரரின் மகளுக்கு எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித்தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி

மேலும் அதற்குச் சுமார் ரூ.50 லட்சம் பணம் செலவாகும் எனக் கூறி, ரோஸ்மேரி தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகம் வரச்சொல்லி, அந்தோணிதாஸ் என்பவரை டாக்டர் என்று அறிமுகம் செய்து வைத்து, ரோஸ்மேரியை நம்ப வைத்துக் கடந்த 08.02.2022 முதல் 19.5.2022 வரை பல தவணைகளாக ரூ.60,50,000 பணத்தை வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் பெற்றுள்ளனர்.

மேலும் ரோஸ்மேரியின் மகளுக்குக் கல்லூரி அட்மிஷன் கிடைத்து விட்டதாகப் போலியான அட்மிஷன் ஆர்டரை காண்பித்து விடுதி கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறி மேலும் ரூ.1,38,000 பணத்தை ரம்யா பெற்றுள்ளார். ஆனால் பேசியபடி மருத்துவ கல்லூரியில் அட்மிஷன் வாங்கி தராமலும், ரோஸ்மேரி கொடுத்த பணத்தை திருப்பித் தராமலும் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். இது சம்மந்தமாகப் புகார்தாரர் தொடர்ந்து பணத்தை கேட்டு வற்புறுத்தவே, 2 பேரும் பல்வேறு தவணைகளாக ரூ.29,50,000 பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதி பணம் ரூ.31,88,000 திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.இதுகுறித்து ரோஸ்மேரி 27.08.2024ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவண மோசடி பிரிவில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பெண் கைது

விசாரணையில் ரோஸ்மேரியிடம், 2 பேரும் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்தது உண்மையெனத் தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி தலைமறைவாக இருந்த ரம்யாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 19.08.2025 அன்று சோழிங்கநல்லூர் பகுதியில் வைத்துக் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் ரம்யா மீது ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில், பல நபர்களுக்கு மருத்துவ கல்லூரியில் அட்மிஷன் வாங்கி தருவதாகக் கூறி பல கோடிகள் மோசடி செய்தது தொடர்பாக வழக்குகள் நிலுவையிலிருந்து வருவது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ரம்யா விசரணைக்குப் பின்னர் 19.08.2025 அன்று எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு வழக்குகள் நீதிமன்ற நடுவர் அவர்கள் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.