தமிழ்நாடு

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!

சென்னை முகப்பேரில், வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது, மின்சார இணைப்புப் பணியில் இருந்த ஆந்திர மாநிலத் தொழிலாளி நாராயணன் (40), மதுபோதையில் மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!
சென்னையில் சோகம்: வீட்டு உரிமையாளர் இறுதிச் சடங்கின்போது மின்சாரம் தாக்கி ஆந்திரத் தொழிலாளி உயிரிழப்பு!
சென்னை முகப்பேர் பகுதியில், வீட்டு உரிமையாளரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளுக்கு ஒத்தாசை செய்த ஆந்திராவைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவர், மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து விவரம்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாராயணன் (40) என்பவர் தனது மனைவியுடன் சென்னை முகப்பேர் மேற்கு சித்தார்த் நகர், வெள்ளாளர் தெருவில் வாடகைக்குத் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (அக். 1) அவரது வீட்டு உரிமையாளர் காலமானார். இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றபோது, நாராயணன் வீட்டு உரிமையாளரின் உறவினர்களுடன் சேர்ந்து ஒத்தாசையாக இருந்துள்ளார். குறிப்பாக, உடலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட சவப்பெட்டிக்கு மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார்.

மதுபோதையில் நேர்ந்த சோகம்

இன்று அதிகாலையில், மதுபோதையில் இருந்த நாராயணன், சவப்பெட்டிக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த மின்சார ஜங்ஷன் பாக்சை தொட்டபோது, அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கே.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், நாராயணன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், நொளம்பூர் காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நாராயணனின் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாராயணனுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டில் வசிப்பது குறிப்பிடத்தக்கது.