தமிழ்நாடு

எந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’?.. வானிலை மையம் சொல்வது என்ன?

நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எந்த மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’?.. வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

சென்னையில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது...

இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு தினங்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் என தெரிவித்துள்ளது.

அதற்கடுத்த 2 நாட்களில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் எனவும் கூறியுள்ளது. மேலும், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசுவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை மற்றும் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை மற்றும் ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யும் எனவும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் எனவும் தெரிவித்துள்ளது.

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொருத்தவரை தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.