தமிழ்நாடு

இது காவல்துறைக்கே களங்கம்... பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை? ஆதாரங்களுடன் சிக்கிய ஐபிஎஸ் ஆபிஸர்!

சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமார், பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

இது காவல்துறைக்கே களங்கம்...  பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை?  ஆதாரங்களுடன் சிக்கிய ஐபிஎஸ் ஆபிஸர்!

குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையிலும் பாலியல் குற்றங்கள் தலை விரித்தாடுவது தொடர் கதையாகி வருகிறது. அதிலும், ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் குமார் மீதே பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறையில் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வருபவர் மகேஷ் குமார். 1999-ல் டிஎஸ்பியாக காவல்துறையில் பணிக்கு சேர்ந்த மகேஷ் குமாரின் சொந்த ஊர் தென்காசி. பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி உள்ள மகேஷ் குமார், சமீபத்தில் தான் ஐபிஎஸ் அதிகாரியாக அந்தஸ்து உயர்வு பெற்றார். 

2024ம் ஆண்டு சென்னை காவல்துறையில் போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையராக இடமாற்றலான மகேஷ் குமார், தற்போது சென்னை போக்குவரத்து காவல்துறை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், இவர் மீது பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.  டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் தெரிவித்துள்ள பெண் காவலர்,  இணை ஆணையர் மகேஷ் குமார், தனக்கு சமூக வலைதளம் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும், அவர் பரிசுப் பொருட்கள் கொடுத்ததாகவும், அந்த ஆதாரங்களையும் பாதிக்கப்பட்ட பெண் காவலர் புகாருடன் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியது. 

இதனையடுத்து இந்த புகார், விசாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 

இதுதொடர்பாக விசாகா கமிட்டியில் இடம்பெற்றுள்ள டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மேலும் ஒரு பெண் காவலர், இணை ஆணையர் மகேஷ் குமார் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது. பெண் காவலர்கள் இரண்டு பேருக்கும், தொடர்ந்து இரவுப் பணியாக கொடுத்துடன், அவர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று மகேஷ்குமார் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதையடுத்து மகேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதுடன், அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளவும் டிஜிபி சங்கர் ஜிவால் உள்துறைக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் மாநில உள்துறை, ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. காவல்துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு, தங்களது உயர் அதிகாரிகளிடம் பாதுகாப்பு இல்லாததும், அவர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதும், பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.