தமிழ்நாடு

தமிழக தேர்தலில் வாக்கு திருட்டு அபாயம் – திருமாவளவன் எச்சரிக்கை

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்யக்கூடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழக தேர்தலில் வாக்கு திருட்டு அபாயம் – திருமாவளவன் எச்சரிக்கை
தமிழக தேர்தலில் வாக்கு திருட்டு அபாயம் – திருமாவளவன் எச்சரிக்கை
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாஜக வாக்கு முறைகேட்டில் ஈடுபடக்கூடும் என எச்சரித்துள்ளார்.

பெரம்பலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் வாக்கு திருட்டு சூழ்நிலை உருவாகலாம். பாஜகவும், அதனுடன் இணைந்த அமைப்புகளும் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட வாய்ப்பு அதிகம் உள்ளது” எனக் கூறினார்.

அவர் மேலும், “ஏற்கனவே கர்நாடகாவில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் இடம்பெற்றதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதாரத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது பீகாரில் வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் பேர் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் அநீதி. இதற்கு எதிராக ராகுல் காந்தி மேற்கொண்ட பயணம் வெற்றி பெற வேண்டும். எங்கள் கட்சியும் இதில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தோம், ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் சாத்தியமாகவில்லை” என்றார்.

மேலும், “தமிழகத்திலும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழர்களின் வாக்குகளைத் திருடும் முயற்சி நடைபெற வாய்ப்பு உண்டு. எனவே மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதோடு, “தேர்தல் ஆணையம் தற்போது பாஜகவின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. வாக்காளர் பெயர்கள் நீக்கப்படுவது, வெளிமாநில மக்களைச் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகள் இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய அநீதி. இதற்கு எதிராகக் குரல் கொடுப்பது அவசியம்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதேபோல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பீகார் வாக்காளர் விவகாரம் பேசப்படாததையும், “30 நாட்கள் சிறையில் இருந்தால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதவியைப் பறிக்கும் சட்டத்துறை” எனப்படும் யோசனை பாசத்தின் உச்சம் எனவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.