தமிழ்நாடு

திருவாரூரில் நூலகத்தை டீ கடையாக மாற்றிய அவலம்

மாணவ மாணவியர்கள், கல்வியாளர்கள் அறிவுதிறனை பழாக்கும் வகையில் நகராட்சி நூலகத்தை டீ கடையாக மாற்றிய அவலம் நடந்துள்ளது.

 திருவாரூரில் நூலகத்தை டீ கடையாக மாற்றிய அவலம்
திருவாரூரில் நூலகத்தை டீ கடையாக மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது
கற்றலை மேம்படுத்தவும், தகவல்களை பரப்புவதற்கும், அறிவு பறிமாற்றத்தை ஊக்குவிக்கவும், ஆராய்ச்சிக்கு உதவுவதற்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணசுந்தரம் என்பவர் குறிப்பாக மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள் நலன் சார்ந்து திருவாரூரில் நூலகம் ஒன்றை ஏற்படுத்திடும் வகையில் தனது சொந்த பணத்தில் இருந்து லட்ச கணக்கில் நிதியினை ஒதுக்கி திருவாரூர் நகராட்சி பெயரில் அதனை வைப்பு நிதியாக வங்கியில் கணக்குவைத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து நூலகத்தை ஏற்படுத்திட வழிவகை கண்டார். இதுதவிர பண்டையகால வரலாற்று புத்தகங்கள், புரட்சியாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்களது வரலாறு முதலான ஆயிரக்கணக்கான புத்தகங்களையும் வாங்கி நூலகத்திற்காக வழங்கியவர் கல்யாணசுந்தரம்.

திருவாரூரில் நூலகம்

திருவாரூர் நகராட்சி நிர்வாகம் கல்யாணசுந்தரம் வழங்கிய நிதியில் இருந்தும், அவர் வழங்கிய பல்வேறு புத்தகங்களை கொண்டும் திருவாரூர் நகராட்சி நிர்வாகம் அலுவலகம் எதிரே உள்ள தெற்குவீதியில் கல்யாணசுந்தரம் முதலியார் என்ற பெயரில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு நூலகம் திறக்கப்பட்டது. இத்தகைய நூலகத்திற்க்கு கடந்த பல ஆண்டுகாலமாக நூலகத்தை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள் என திருவாரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலதரப்பினரும் தினசரி நாளிதழ், பருவ இதழ், சிறுகதை தொகுப்புகள், நாவல்கள் மற்றும் வரலாற்று தொகுப்புகள் அடங்கிய புத்தகங்கள் உள்ளிட்ட எண்ணற்ற அறிவுசார்ந்த புத்தகங்களை படித்து பயனடைந்து வந்தனர்.

இத்தகைய நூலகத்தால் மாணவ,மாணவியர்கள் அரசு போட்டி தேர்வுகளில் வெற்றிபெற்று அரசு வேலை கிடைக்கப்பெற்றதோடு, மாவட்டத்தின் உயர் பொறுப்பு அதிகாரிகளாக பணியில் சேர்ந்தவர்கள் ஏராளம். இந்த இந்லையில், திருவாரூர் நகராட்சி நூலகம் கடந்த சில ஆண்டுகாலமாக நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஓசியில் கிடைக்கும் டீக்காவும், வடை போண்டாவிற்காகவும் இதனை டீ கடையாக மாற்றிவிட்டனர்.

டீ கடை ஆக்கிரமிப்பு

பெயரளவிற்கு நூலகத்தின் வாயில் பகுதியில் செயல்படும் ஒரு தனியார் டீ கடை உரிமையாளர் நகராட்சி அதிகாரிகள் துணையுடன் நூலகத்தின் மொத்த இடத்தையும் தனது தொழிலுக்காக பயன்படுத்தி வருகிறார். நூலக கட்டிடத்தின் உள்ளே வடை, போன்டா உள்ளிட்டவைகளை தயார் செய்வதற்கான அடுப்புகள், சிலிண்டர்கள், பாத்திரங்கள், கிரைண்டர், மிக்ஸி, காய்கறிகள் உள்ளிட்டவைகளை வைத்து நூலகத்திற்கு உள்ளே யாரும் நுழையமுடியாதபடி பொருட்களை அடைத்து வைத்துள்ளார்.

மேலும் டீ கடை உரிமையாளர் மாவு அரைப்பதற்கும், தண்ணீர் பயன்பாட்டிற்கும் நூலகத்தின் மின்சாரத்தையே பயன்படுத்தி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர மின்விசிறி, மேஜை, நாற்காலி என அனைத்து வசதிகளுடன் கூடிய நூலக கட்டிடத்தின் உள்ளே டீ கடை உரிமையாளர் தனது வாடிக்கையாளர்களை அமரவைத்து வாசகர்களுக்காக நகராட்சியால் வாங்கப்படும் நாளிதழிலில் வைத்து டீ, வடை போன்றவைகளையும் சப்ளை செய்கின்றனர்.மேலும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் நூலகத்திலேயே புகைப்பிடிக்கும் சம்பவம் அறங்கேறி வருகிறது.

வாசகர்கள் வேதனை

மேலும் டீ கடையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துவிதமான வசதிகளுடன் கூடிய நகராட்சி நூலகத்தில் சமூகவிரோத கும்பல்கள் டீ கடை மூடியவுடன் விரும்பதகாத சம்பவங்களிலும் அறங்கேற்றி வருகின்றனர். முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் நகராட்சி நிர்வாகம் தனிநபர் நல்லொழுக்கத்தை பேணி சிறந்த கல்வியாளராக மாற்றிட நூலகத்திற்காக தனியார் வழங்கிய நிதியினை சீரழித்துவருவது கல்வியாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.