தமிழ்நாடு

"லக்கி பாஸ்கர்" unlucky பாஸ்கர் ஆன கதை: சொகுசு கார் மோசடியில் அமலாக்கத்துறை வளையத்தில் துல்கர் சல்மான்!

சொகுசுக் கார்களைப் போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து, ஹவாலா மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் தொடர்புடைய கேரளா, தமிழ்நாடு உட்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை (ED) தீவிரச் சோதனை நடத்துகிறது.


சொகுசு கார் மோசடியில் அமலாக்கத்துறை வளையத்தில் துல்கர் சல்மான்!
பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 'லக்கி பாஸ்கர்' படத்தில் வங்கியை ஏமாற்றிச் சொகுசு வாழ்க்கை வாழும் காட்சி இடம்பெறும் நிலையில், நிஜ வாழ்க்கையில் அவர் சொகுசு கார்கள் இறக்குமதி விவகாரத்தில் மத்திய அரசின் அமலாக்கத்துறை (ED) மற்றும் சுங்கத்துறை விசாரணையில் சிக்கித் தவித்து வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'லக்கி பாஸ்கர்' நிஜத்தில் 'அன்லக்கி பாஸ்கர்' ஆகிவிட்டதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத பணப் பரிமாற்றம்:

சொகுசு கார்களைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது மற்றும் அங்கீகரிக்கப்படாத அந்நியச் செலாவணிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக, அமலாக்கத்துறையின் கொச்சி மண்டல அலுவலகம் இன்று (அக். 8) கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் 17 இடங்களில் தீவிரச் சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சோதனைகள் FEMA (அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம்) சட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

சோதனை நடைபெறும் இடங்கள்:

கேரளா: எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம்.

தமிழ்நாடு: கோயம்புத்தூர், சென்னை.

குறிப்பாக, திரைப்பட நடிகர்களான துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சக்கலக்கல் ஆகியோரின் வீடுகள், நட்சத்திர ஹோட்டல்கள், வாகன உரிமையாளர்கள், ஆட்டோ ஒர்க்‌ஷாப்கள் மற்றும் வர்த்தகர்களின் நிறுவனங்களில் இந்தச் சோதனைகள் நடைபெறுகின்றன.

மோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனை அம்பலம்:

சுங்கத்துறை அதிகாரிகளிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், அமலாக்கத்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தவை. போலி ஆவணங்கள்: கோயம்புத்தூரை அடிப்படையாகக் கொண்ட ஒரு மோசடி நெட்வொர்க், இந்திய ராணுவம், அமெரிக்கத் தூதரகம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் பெயர்களில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளது.

பூட்டான் ராணுவத்தால் கைவிடப்பட்ட லேண்ட் குரூசர்கள், லேண்ட் ரோவர்கள், டாடா எக்ஸ்.யூ.வி. போன்ற சொகுசு கார்கள் மற்றும் லாரிகள் உட்பட 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) மோசடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சொகுசு கார்கள் பின்னர் சினிமா துறை உட்படப் பல பெரிய தொழிலதிபர்களுக்குக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டுள்ளன. கார்களுக்கான பணம் அங்கீகரிக்கப்படாத அந்நியச் செலாவணிப் பரிவர்த்தனைகள் மற்றும் ஹவாலா மூலம் எல்லை கடந்த நிலையில் செலுத்தப்பட்டு, FEMA சட்டத்தை மீறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுங்கத்துறை நடத்திய 'ஆபரேஷன் நும்கூர்' சோதனையில் நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் சிக்கினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில் துல்கர் சல்மானுக்குச் சொந்தமான இரண்டு விண்டேஜ் லேண்ட் ரோவர், டிஃபென்டர் கார்கள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கொச்சியில் உள்ள சுங்க ஆணையரகம் சமீபத்தில் துல்கர் சல்மானுக்குச் சொந்தமான மற்றொரு காரையும் பறிமுதல் செய்தது. இதன் மூலம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

அமலாக்கத்துறை விசாரணையில், சொகுசு கார்களை வாங்கியவர்கள் மோசடி நெட்வொர்க் மூலம் ஹவாலா மற்றும் அந்நியச் செலாவணிப் பணப்பரிமாற்றம் செய்தார்களா என்பதைக் கண்டறியத் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.