தமிழ்நாடு

‘குட் பேட் அக்லி’யால் வந்த பிரச்னை...இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது புகார்

"குட் பேட் அக்லி" படத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி திரைப்பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘குட் பேட் அக்லி’யால் வந்த பிரச்னை...இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது புகார்
குட் பேட் அக்லி திரைப்பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்
குட் பேட் அக்லியால் பிரச்னை

அஜித்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் "குட் பேட் அக்லி". இந்த திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் நலசங்கத்தினர் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.

அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் லிங்கப்பெருமாள் அளித்துள்ள புகாரில், "நடிகர் அஜித்குமார் நடித்து வெளியாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள அர்ஜீன்தாஸ் இளம்பெண்களுடன் ஆபாசமாக நடனம் மற்றும் அங்கு அசைவுடன் ஆட வைத்து பல பாடல் காட்சிகளை அருவறுக்கத்தக்க வகையில் படமாக்கியுள்ளார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெண்களை இழிவாகவும், அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனம் ஆட வைத்தும், இயக்குநர் தன் வக்கிர எண்ணங்களை, படமாக்கி பொதுவெளியில் திரைப்படமாக வெளியிட்டுள்ளார். பெண்களின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் சிதைக்கும் வகையில் பிம்பத்தை உருவாக்கியுள்ளார்.

சமூக அக்கறை சிறிதும் இன்றி இப்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு பெண்களை இழிவுப்படுத்தி காட்டப்பட்டுள்ள காட்சிகளை இப்படத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.