தமிழ்நாடு

வலிப்பால் உடல்நலக் குறைவு.. சிகிச்சை முடிந்து ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் மீண்டும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வலிப்பால் உடல்நலக் குறைவு.. சிகிச்சை முடிந்து ஞானசேகரனிடம் மீண்டும் விசாரணை
ஞானசேகரன்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து,  சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

கடந்த திங்கட்கிழமை மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு புலனாய்வு குழுவினர் குற்றவாளி ஞானசேகரனை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதல் நாள் இரவு எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தனியாக தான் பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளே சென்றாரா? வேறு யாரேனும் உடன் வந்தார்களா? வேறு யாருக்கெல்லாம் இந்த வழக்கில் தொடர்புள்ளது என்பது குறித்து விடிய விடிய விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்... போலீஸ் காவலில் இருந்த குற்றவாளி ஞானசேகரனுக்கு வலிப்பு!

அவரது செல்போனில் உள்ள வீடியோக்கள் குறித்து போலீஸார் ஞானசேகரனிடம் விசாரணை நடத்தினர். அண்ணா நகர் காவல் நிலையத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரி துணை ஆணையர் சினேகா பிரியா தலைமையில் போலீஸார் இந்த விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணை அனைத்தும்  எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ காட்சிகள் மூலமாகவும் பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் குற்றவாளி ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு  மருத்துவமனைக்கு அழைத்து  செல்லப்பட்டார். ஞானசேகரனுக்கு சிகிச்சை முடிந்த நிலையில் அவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் எழும்பூர் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.