தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவனை சிக்க வைத்தது யார்? வெளியான அதிர்ச்சி தகவல்!

சீர்காழியில் மூன்றரை வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தில், சிறுவன் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தங்களது சந்தேகமே அவர்கள் மீது தான் சிலரை கை காட்டியுள்ளனர் சிறுமியின் பெற்றோர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும், கைதான சிறுவனின் பெற்றோரும் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்களை இப்போது பார்க்கலாம்....

சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவனை சிக்க வைத்தது யார்? வெளியான அதிர்ச்சி தகவல்!
சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவனை சிக்க வைத்தது யார்? வெளியான அதிர்ச்சி தகவல்!

கடந்த மாதம் இறுதியில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடந்த பாலியல் குற்றச் சம்பவம், தமிழகத்தையே உலுக்கியிருந்தது. மூன்றரை வயது சிறுமிக்கு, அவரது பெரியப்பா மகனான 16 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அப்போது சிறுமி கூச்சலிட்டதால், அவரை கல்லால் தாக்கியதாகவும் செய்திகள் வெளியாகின. பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுமியோ முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட, குற்றம்சாட்டப்பட்ட 16 வயது சிறுவனோ போக்சோ வழக்கில் கைதானான். 

முக்கியமாக இந்தச் சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசியதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, பாதிக்கப்பட்ட சிறுமி, அந்த சிறுவனின் முகத்தில் துப்பியதால் தான், இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்திருப்பதாகக் கூறி பொதுமக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். இதனால் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இடமாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும், போக்சோவில் கைதான சிறுவனின் பெற்றோரும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஒன்றாக மனு அளித்துள்ளனர். 
 
அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், உண்மையான குற்றவாளியை மறைத்து சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். முக்கியமாக அங்கன்வாடி ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர் இருவரையும் சரியாக விசாரணை செய்யவில்லை என அவர்கள் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சம்பவத்தன்று சிறுமியை வழக்கம்போல அங்கன்வாடி ஆசிரியர் தான் அழைத்து சென்றதாகவும், மதியம் 12 மணிக்கு, வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனிடம் சென்று உனது தங்கையை காணவில்லை தேடிப்பார்க்க வேண்டும் என அந்த ஆசிரியர் தான் அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், சிறுவனிடம் உனது தங்கையை காணவில்லை, தேடு என சொல்லி, அங்கன்வாடி சுவர் அருகில் சத்தம் கேட்பதாகக் கூறியுள்ளார். அதன்பின்னரே சிறுவன் சுவரின் மீது ஏறி பின்புறம் பார்த்தது, தனது தங்கையை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், இரண்டு பேர் அந்தச் சிறுவனை பிடித்து கை, கால்களை கட்டி வைத்து அடித்ததோடு, அவர் தான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டதாக திசை திருப்பிவிட்டனர். இதனை நம்பிய காவல்துறையினர், உரிய விசாரணை செய்யாமல் அங்கன்வாடி ஆசிரியர் கொடுத்த பொய்யான தகவலின் அடிப்படையில் சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்துவிட்டனர். மேலும், தங்களிடம் எதுவும் சொல்லாமல், அங்கன்வாடி ஆசிரியரையும் ஊழியரையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் கைது செய்யப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்தச் சம்பவத்தில் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறுமியின் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுக்கச் சென்றால், தங்களுக்கு போலீஸார் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  

ஆனால், இதுபற்றி விளக்கம் அளித்துள்ள காவல்துறையோ, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தான் சிறுவன் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும், கைதான சிறுவனின் பெற்றோரும், ஒரே மாதிரியான தகவலை சொல்ல, உண்மையான குற்றவாளி யார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இந்த விவகாரத்தில், போலீஸார் இன்னும் தீவிரமான விசாரணை நடத்த வேண்டும் என்பதே, அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.