தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசலுக்கு தவெக தலைவரின் காலதாமதமே காரணம்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

த.வெ.க. நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவாக விளக்கமளித்தார்.

கரூர் கூட்ட நெரிசலுக்கு தவெக தலைவரின் காலதாமதமே காரணம்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
CM Stalin
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று (அக்.15), கரூரில் அண்மையில் த.வெ.க. நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவாக விளக்கமளித்தார். இந்தப் பெருந்துயரம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

முதல்வரின் விளக்கம்

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், கரூரில் நிகழ்ந்த சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியதாகத் தெரிவித்தார்.

கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள த.வெ.க.வினர் முதலில் உழவர் சந்தை மற்றும் லைட் ஹவுஸ் பகுதிகளில் அனுமதி கேட்டதாகவும், அது மறுக்கப்பட்டதாகவும், பின்னர் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கேட்டதன்பேரில் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். வழக்கமாக அரசியல் பரப்புரைக் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு காவலர்கள் எண்ணிக்கையைவிட, கரூர் பரப்புரையின்போது அதிகமாகவே பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

ஏற்பாடுகளில் குளறுபடி

கூட்ட ஏற்பாட்டாளர்கள் செய்ய வேண்டிய சில முக்கிய ஏற்பாடுகள் கரூரில் செய்யப்படவில்லை என்று முதல்வர் சுட்டிக்காட்டினார். காத்திருந்த மக்களுக்குப் போதிய குடிநீர் இல்லை, உணவு வழங்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. மேலும், இயற்கை உபாதைகளைக் கழிக்கப் பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதே இடத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க. நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, கட்டுப்பாட்டோடு நடந்துகொண்டனர் என்றும் அவர் ஒப்பிட்டுக் கூறினார்.

த.வெ.க. தலைவர் மதியம் 12 மணிக்குக் கரூருக்கு வருவதாக அறிவித்துவிட்டு, இரவு 7 மணிக்குத்தான் வந்ததால், மதியம் முதலே மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது என்றும் முதல்வர் தெரிவித்தார். நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்கப் போதிய இடவசதி இல்லாததால், அன்று இரவே தனிக்குழு அமைக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் பேரவையில் தெரிவித்தார்.

பொறுப்போடு செயல்பட வலியுறுத்தல்

"நான் எனது 50 ஆண்டுகாலப் பொது வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறேன், பார்த்திருக்கிறேன். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துபவர்கள் அதற்குரிய சட்டத் திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும், பொது ஒழுக்கங்களுக்கும் கட்டுப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

"கட்டுப்பாடுகளை மீறும்போது, அதனால் பாதிக்கப்படுவது நிகழ்ச்சி நடத்தும் கட்சியின் தொண்டர்கள்தான். அதனை மனதில் வைத்து பொறுப்போடு செயல்பட வேண்டும்" என்றும் அரசியல் கட்சிகளை அவர் வலியுறுத்தினார்.