தமிழ்நாடு

மகப்பேறு சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ்.. 13 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு பின் வயிற்றில் பேண்டேஜை வைத்து தைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தனியார் மருத்துவமனைக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகப்பேறு சிகிச்சைக்கு சென்ற பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ்.. 13 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
கோப்பு படம்

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி பிரீத்தி, கருவுற்றதை தொடர்ந்து திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிரீத்தி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சைக்கு சென்றபோது இரு உயிர்களையும் காப்பாற்ற வேண்டுமானால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி, 2022-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி  அறுவை சிகிச்சையின் மூலம் கருப்பையில் இருந்து ஆண் குழந்தை எடுக்கப்பட்டது.  ஏழு மாத சிசு என்பதால், குழந்தை மற்றொரு தனியார் மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், தாய் பிரீத்திக்கு  தையல் போட்ட இடத்தில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. உணவு உண்ண முடியாமலும், குழந்தைக்கு பாலூட்ட முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து,  அவர், சென்னை அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரீத்தி வயிற்றில் வயிற்றில் பேண்டேஜ் இருந்ததை கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இதையடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களுக்கு எதிராக 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், சிகிச்சையின் போது கவனக்குறைவாக இருந்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை கட்டணம் 3 லட்சத்து 26 ஆயிரத்து 746 ரூபாயும், வழக்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாயும் சேர்த்து, 13 லட்சத்து 36 ஆயிரத்து 746 ரூபாயை இரண்டு மாதங்களில் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு இதேபோன்று புதுச்சேரியில் பிரசவ வலி ஏற்பட்டு பெண் ஒருவர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் இவருக்கு குழந்தை பிறந்த நிலையில் தொடர்ந்து வயிற்று வலி இருந்ததால் மீண்டும் மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது வயிற்றில் மருத்துவ உபகரணங்கள் வைத்து தைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 7 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு மற்றும் வழக்கு தொகையாக 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்க புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டது.