தமிழ்நாடு

சட்டமன்றத்தில் தீர்மான நாடகத்தை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கருணாநிதி மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றி மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கியுள்ளார்

சட்டமன்றத்தில் தீர்மான நாடகத்தை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அதிமுக முன்னாள் ஆர்.பி.உதயகுமார்
தொண்டர்களிடையே சலசலப்பு

அதிமுக கழக அம்மா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 71-வது பிறந்த நாள் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் அஇஅதிமுகவின் அடையாளமாக இருந்த அண்ணாவின் உருவப்படம் இடம்பெறாமல் மேடையில் வைக்கப்பட்டு இருந்தது தொண்டர்களிடையே சலசலப்பை உண்டாக்கியது.

தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், “ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகிய இருவரின் மறுஉருவமாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். எடப்பாடி பழனிசாமி தமிழ் மக்களுக்காக போராடி வருகிறார். தமிழ்நாட்டு மக்களுக்காக எடப்பாடி பழனிசாமி தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி 2026ம் ஆண்டு தனது 72வது பிறந்த நாளை முதலமைச்சராக கொண்டாடுவார்.


தீர்மான நாடகம்

திமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் அமைக்கப்படும் குழுக்கள் எந்தவொரு செயல்பாடுகளும் இல்லாத குழுக்களாக உள்ளது. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைத்து உள்ளார். கூட்டணியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கூட்டணி குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.அதிமுக கூட்டணி ஆட்சியா? அதிமுக தனித்து ஆட்சியா.? என பேசி வருகின்றனர்.இதன் மூலம் 2026ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக வெற்றி கூட்டணி அமைத்ததால் முதலமைச்சர் ஸ்டாலின் வெலவெலத்து போய் இருக்கிறார்.

இதன் காரணமாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடுக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.சட்டமன்ற தேர்தலுக்கும் முன்னர் அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரவுள்ளன. கிளை செயலாளராக இருந்தாலும், முதலமைச்சராக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி தனித்துவமாக செயல்பட்டார். எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா முதன் முதலில் எடப்பாடி பழனிசாமி என அழைத்தார்.எடப்பாடி பழனிசாமி போன்ற சாமானியன், எளியவன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாக்களை போல எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட வேண்டும். மாநில சுயாட்சி தீர்மானம், நீட் தேர்வு ரத்து தீர்மானம், மும்மொழிக்கொள்கை தீர்மானம், கச்சத்தீவு தீர்மானம் என சட்டமன்றத்தில் தீர்மான நாடகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.

பொன்முடி கருத்தை முதலமைச்சர் ஒத்துக்கொள்கிறார்

கருணாநிதி மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றி மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்கியுள்ளார். மாநில சுயாட்சியின் படியே அதிமுக ஆட்சி செய்தது, அத்தோடு அதன் வடிவிலேயே அதிமுகவும் செயல்படுகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒத்துக் கொள்ள வேண்டியது தானே, நீட் தேர்வில் சமூக நீதியை அதிமுக பெற்று தந்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக அரசு அமைத்த தடுப்புகளை உடைத்தெறிந்து அதிமுக நிர்வாகிகள் மக்களை சந்திக்க வேண்டும். திமுக அரசு மெஜரிட்டி அரசாக உள்ள நிலையில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை சட்டமன்றத்தில் விவாதித்து இருக்க வேண்டும். பொன்முடி விவகாரத்தில் முதலமைச்சர் ஏன் மவுனம் காக்கிறார். மக்கள் மன்றம், நீதிமன்றம் கண்டித்தும் பொன்முடி மீது முதலமைச்சர் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. பொன்முடி மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காததை பார்தால் பொன்முடியின் கருத்தை முதலமைச்சர் ஒத்துக் கொள்கிறார் என தோன்றுகிறது. சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பூஜ்யமும், அதிமுகவுக்கு ராஜ்யமும் கிடைக்கும்” என பேசினார்.