தமிழ்நாடு

அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த கலாச்சார வீடுகள்…வனத்துறையின் அலட்சியத்தால் ரூ.7 கோடி வீண்

ரூ.7 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த நிலையில் சூழல் கலாச்சார கிராம வீடுகள் வனத்துறையின் அலட்சியத்தால் வீணாகியுள்ளது.

 அருங்காட்சியகத்தில் கரையான் அரித்த கலாச்சார வீடுகள்…வனத்துறையின் அலட்சியத்தால் ரூ.7 கோடி வீண்
பழங்குடியின அருங்காட்சியகத்தில் கரையான் அரிப்பால் சேதமான வீடுகள்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக நிதி ஒதுக்கப்படாததால் அருங்காட்சியகம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது.

பழங்குடியினர் அருங்காட்சியகம்

கடந்த 2018ஆம் ஆண்டு ரூ.7 கோடி செலவில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாச்சார கிராமம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக பவானிசாகர் வனச்சரகம், காராச்சிக்கொரை பகுதியில் 20 ஹெக்டேர் பரப்பளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டு 2018ல் அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கியது. இதில் பழங்குடியின அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாச்சார கிராமத்தில் பழங்குடியின மக்கள் வனம் மற்றும் வன உயிரினங்களுடன் ஒன்றிணைந்து வாழும் முறை, வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகள், கலாச்சார பராம்பரிய முறைகள், பயன்பாட்டு பொருட்கள், விவசாய முறைகள், உணவு பழக்க வழக்கங்கள், மருத்துவ வழிமுறைகள், பயன்படுத்தும் இசை கருவிகள் மற்றும் பழங்குடியின கிராம மக்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதோடு, பழங்குடியினர் கலாச்சார கிராமத்தில் சங்க இலக்கியம் ஸ்டுடியோ உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய அருங்காட்சியகம் கட்டுமானப்பணிகள் தொடங்கி 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது.

இதில் பழங்குடியின மக்கள் உபயோகப்படுத்திய இசை கருவிகள், உடைகள், வாழ்வியல் பொருட்கள், கல் மற்றும் மர பொருட்கள் மாதிரிகள் அமைத்தல், பழங்குடியினர் குடியிருப்புகள் மாதிரி அமைத்தல், பழங்குடியினர் பயன்படுத்தும் மூலிகை தோட்டம் அமைத்தல், பார்வையாளர்களுக்கு இயற்கை பசுமை பூங்கா அமைத்தல், பழங்குடியினர் உணவகம் அமைத்தல், பழங்குடியினர் பராம்பரிய பொருட்களை விற்பனை மையம் அமைத்தல், பொருள்விளக்க மையம் அமைத்தல், நீர்த்தேக்க குட்டை அமைத்தல், பார்வையாளர்களுக்கு இயற்கை முறையில் நடைபாதை அமைத்தல், கலாச்சார உள் மற்றும் வெளியரங்கம் அமைத்தல், பார்வையாளர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் தங்க வசதிகள், ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலைத்தொட்டி அமைத்து குடிநீர் வசதி, பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் தாவரங்களைக் கொண்டு இயற்கை சார்ந்த நில அமைப்பு மற்றும் அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார கிராமத்தின் சிறந்த மேலாண்மைக்குத் தேவையான கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் நிதி பற்றாக்குறையால் முழுமையாக ஏற்படுத்தப்படாததால் தற்போது வரை பழங்குடியினர் அருங்காட்சியகம் திறப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

கரையான் அரிப்பால் பாதிப்பு

இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பழங்குடியினர் அருங்காட்சியகத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கான, பூங்கா வசதி, நடைபாதை வசதி, பைப் லைன் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ரூ.7 கோடி செலவு செய்யப்பட்டுள்ள நிலையில் முழுமையாக பணிகளை முடிக்க மேலும் கூடுதலாக ரூ.2 கோடி நிதி வேண்டி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் நிதி கிடைக்கப்பெற்றவுடன் பணிகள் 100 சதவீத முடிக்கப்பட்டு திறக்கப்படும் என தெரிவித்தனர். இதற்கிடையே அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் குடியிருப்புகள் அடங்கிய மாதிரி வீடுகளில் நாணல் புற்களால் அமைக்கப்பட்ட மேற்கூரைகள் கரையான் பூச்சிகளால் அரிக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளது.

நிதி பற்றாக்குறை

அருங்காட்சியகத்தில் பராமரிப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளாத நிலையில் உள்ளதோடு, அதற்குள் வைக்கப்பட உள்ள சிலைகளும் நிறுவப்படவில்லை. இதனால் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பழங்குடியினர் அருங்காட்சியகம் நிதி பற்றாக்குறையால் இன்னும் முழுமை பெறாமல் உள்ளதோடு ஏற்கனவே அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்படுகிறது.