தமிழ்நாடு

வரி ஏய்ப்பு புகார்: பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை!

பிரபல துணிக்கடை நிறுவனமான 'கோ கலர்ஸ்'-க்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகார்: பிரபல துணிக்கடையில் வருமான வரித்துறை சோதனை!
Income Tax Department raids popular clothing store
பிரபல துணிக்கடை நிறுவனமான 'கோ கலர்ஸ்' (Go Colors)-க்குச் சொந்தமான சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் உள்ள இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கியமாகப் பண்டிகைக் காலத்தை ஒட்டி விற்பனை அதிகமாகும் நேரத்தில் இந்தச் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை நடைபெறும் இடங்கள்

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் 'கோ கலர்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலை, பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர், நுங்கம்பாக்கம், அண்ணா நகர், வளசரவாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள நிறுவனக் கிளைகள் மற்றும் அதன் உரிமையாளர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சோதனையானது மூன்று நாட்கள் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நிறுவனத்தின் பின்னணி

'கோ ஃபேஷன் இந்தியா லிமிடெட்' என்ற பெயரில் செயல்படும் 'கோ கலர்ஸ்' நிறுவனம், பெண்களுக்கான பல்வேறு வகையான பிரத்யேக ஆடைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 120 நகரங்களில் 500க்கும் மேற்பட்ட விற்பனைக் கடைகள் இந்நிறுவனத்திற்கு உள்ளன. கடந்த ஜூன் மாதம் துபாயில் புதிய கிளைகளைத் தொடங்கி, சர்வதேச அளவில் தனது வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிறுவனம் ஆண்டிற்கு சுமார் ரூ.850 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. 2021-ஆம் ஆண்டு பங்குச்சந்தையிலும் இடம்பிடித்து வணிக முதலீட்டை அதிகரித்தது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கௌதம் சரோகி ஆவார். ராகுல் சரோகி, பிரகாஷ் குமார் சரோகி ஆகியோரும் நிறுவனர்களாகச் செயல்பட்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு குறித்த சந்தேகம்

பொதுவாகத் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்றப் பண்டிகைக் காலங்களில் துணி விற்பனை அதிகரிக்கும். இந்த நிலையில், துணிக்கடைகளின் முதலீடுகள் எங்கிருந்து வருகின்றன, அவற்றின் வருமானம் முறையாகக் கணக்குக் காட்டப்பட்டு வரிகள் செலுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை தொடங்கியுள்ளது.

ஏற்கனவே பிரபல துணிக் கடையான போத்தீஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,000 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது 'கோ கலர்ஸ்' நிறுவனத்தின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பண்டிகைக் கால விற்பனை மற்றும் கடந்த கால வரவுசெலவு உள்ளிட்ட அனைத்துக் கணக்குகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சோதனைக்குப் பிறகு வரி ஏய்ப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.