தமிழ்நாடு

’அன்பே சிவம்.. அனைவரும் சமம்’ என்பது தான் காவிக் கொள்கை: தமிழிசை பேட்டி

”தமிழக அரசு தான் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு தமிழக மக்களைக் கடனாளிகளாக ஆக்கி வருகிறார்கள்” என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

’அன்பே சிவம்.. அனைவரும் சமம்’ என்பது தான் காவிக் கொள்கை: தமிழிசை பேட்டி
Tamilisai Soundararajan Slams TN Govt Over Central Schemes
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தில், மத்திய அரசின் நலத்திட்டங்களை CSC (பொது சேவை மையம்) மூலம் பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் அதன் சேவைகளைத் தொடங்கி வைத்த முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதன் விவரங்கள் பின்வருமாறு-

பிரதமரின் ஆட்சியில் தான் சமூக நீதி:

பிரதமரின் "பொது சேவை மையம்" (Common Service Center) திட்டங்கள் எல்லா குடும்பங்களிலும் ஏதோ ஒரு வகையில் பயன்படுகின்றன என்று தமிழிசை குறிப்பிட்டார். "தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. பல மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் பயன்பெற வேண்டும் என்று அவர்களை ஊக்குவிப்பாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அவர்கள் (மாநில அரசு) எதிர்ப்பாளர்களாக இருக்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

"சமூக நீதி என்று இவர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஐந்து முறை தமிழகத்தை ஆண்டும் கூட பொருளாதாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சமூகநீதியைக் கொண்டு வரவில்லை" என்று திமுகவை விமர்சித்த தமிழிசை, "11 ஆண்டுகளில் சமூக நீதியை பாரதப் பிரதமர் கொண்டு வந்திருக்கிறார் என்று உலக வங்கி பாராட்டி உள்ளது. மத்திய அரசின் ஏதாவது ஒரு திட்டத்தினால் பயன் பெற்றவர்கள் 67% பேர் இருப்பதாகவும், 30 கோடி மக்கள் பசியிலிருந்து விடுபட்டு இருக்கிறார்கள் என்று உலகக் குறியீடு தகவல் சொல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். "சமூக நீதி என்பது நிச்சயமாக பிரதமரின் ஆட்சியில்தான் நிலைநாட்டப்பட்டு வருகிறது" என்றார்.

அன்பே சிவம் .. அனைவரும் சமம்:

"தமிழகத்திற்கு வஞ்சகம் செய்வதுபோல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 10 லட்சம் கோடிக்கு மத்திய அரசு திட்டங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன" என்று கூறிய தமிழிசை, "தமிழகம்தான் கடனுக்கு மேல் கடன் வாங்கிக்கொண்டு தமிழக மக்களைக் கடனாளிகளாக ஆக்கி வருகிறார்கள்" என்று தமிழக அரசைக் குற்றம் சாட்டினார்.

முதலமைச்சரின் ஒரு ட்வீட்டை வன்மையாகக் கண்டித்த தமிழிசை, "ஏற்றத்தாழ்வை, பாகுபாட்டை ஏற்படுத்தும் காவி என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அன்பே சிவம், அனைவரும் சமம் என்று தான் காவிக் கொள்கை சொல்கிறது. நாங்கள் பின்பற்றும் இந்து மதக் கொள்கையானது எந்தவித ஏற்றத்தாழ்வு கொண்டதில்லை" என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.