தமிழ்நாடு

அக்டோபர் 14-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு!

வரும் அக்டோபர் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

அக்டோபர் 14-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு!
Speaker Appavu
தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 29 அன்று சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தொடரின் முக்கிய அம்சங்கள்

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் இன்று பேசிய சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, வரும் அக்டோபர் 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டம் தொடங்கும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கூட்டத்தின் முதல் நாளில், மறைந்த வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி உட்பட 8 உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் பிறகு, 2025-26ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

இந்தக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது, அக்டோபர் 14-ஆம் தேதிக்கு முன்பு கூடும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

பட்ஜெட் தாக்கல் - மானியக்கோரிக்கை விவாதம்

கடந்த மார்ச் 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதை தொடர்ந்து, மார்ச் 17 முதல் 21 ஆம் தேதி வரை இரு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது. அதன்பின்னர், மார்ச் 24 முதல் ஏப்ரல் 29 வரை துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதன்பிறகு, சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.