Tamil Nadu Fishermen Released From Sri Lanka Prison : புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, அவர்களாஇ இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல், நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள், காங்கேசன்துறை அருகே ஆகஸ்ட் 23ம் தேதி அன்று மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.
மேலும், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனையடுத்து இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்களை மீட்க, தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு 19 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். அதன்பின்னர் மீனவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின்பு ஏர் இந்தியா விமானம் மூலம் கொழும்புவில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த மீனவர்கள் அனைவரையும் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். குடியுரிமை அதிகாரிகள் போதிய அளவு இல்லாததால் இந்த சோதனை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய மீனவர்கள் அனைவரையும், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். இறுதியாக 19 மீனவர்களும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த தனி வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.