TNPSC Group 2 Exam 2024 in Tamil Nadu : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு அரசு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வுகள் மூலம் தேர்வு செய்து வருகிறது. இந்த தேர்வுகள் தொடர்பான அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டு அறிவிக்கப்படும். அந்த வகையில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. அதாவது தமிழ்நாடு அரசுத் துறைகளில் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப் 2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இந்த பதவிகளுக்கான முதனிலைத் தேர்வு(TNPSC Group 2) இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2,763 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வை 7,93,966 பேர் எழுத உள்ளனர். இதில் ஆண்கள் 3 லட்சத்து 9,841 பேர்; பெண்கள் 4 லட்சத்து 84,074 பேர்; மூன்றாம் பாலினத்தவர் 51 பேர் அடங்குவர். சென்னையில் மட்டும் 75,185 பேர் தேர்வு எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்வை கண்காணிக்கும் பொருட்டு துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலர் என மொத்தம் 2,763 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் முதன்மை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கு முன்னதாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு வந்து விட வேண்டும் என்றும் 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள், எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் ஹால் டிக்கெட்(TNPSC Group 2 Exam Hall Ticket) இல்லாதவர்களும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட மாட்டார்கள். செல்போன், புத்தகம் குறிப்பேடுகள், கைப்பை உள்ளிட்ட மற்ற பொருட்களை தேர்வு மையத்துக்கு கொண்டு வரக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் தேர்வு நடைபெறும் நேரம் மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப் 2 தேர்வு#Kumudamnews24x7 | #kumudam | #kumudamnews | #Group2Exam | #TamilNadu | #TNPSCExams pic.twitter.com/llXgmch216
— KumudamNews (@kumudamNews24x7) September 14, 2024