தமிழ்நாடு

தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக புதியதாக 6 அறிவிப்பு- மனமிறங்குவார்களா போராட்டக் குழு?

பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக புதியதாக 6 அறிவிப்பு- மனமிறங்குவார்களா போராட்டக் குழு?
Tamil Nadu Cabinet Announces 6 New Welfare Measures for Sanitation Workers
இன்று (14-08-2025) தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக புதிததாக 6 அறிவிப்புகளை முதல்வர் அறிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் நிறைவில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 6 அறிவிப்புகள் குறித்த விவரங்களை வெளியிட்டார். அதன் விவரம் பின்வருமாறு-

அறிவிப்பு 1: தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது அவர்களுக்கு நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இத்தகைய தொழில்சார் நோய்களை கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

அறிவிப்பு 2: தற்போது தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் மூலமாக, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களின் எதில்கால நலன்களையும், வாழ்வாதரத்தையும் முழுமையாக உறுதி செய்யக்கூடிய வகையில், இந்த நிதியுதவியுடன் கூடுதலாக இந்தப் பணியாளர்களுக்கு 5 இலட்சம் ரூபாய் அளவிற்கு காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால், பணியின் போது இறக்க நேரிடும் தூய்மைப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு 10 இலட்சம் ரூபாய் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படும்.

அறிவிப்பு 3: தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சமூகப் பொருளாதார நிலையினை உயர்த்திட சுய தொழில் தொடங்கும்போது, அத்தொழில் திட்ட மதிப்பீட்டில், 35 விழுக்காடு நிதி அதிகபட்சமாக 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். மேலும், இந்த கடனுதவியைப் பெற்று தொழில் தொடங்கி கடன் தொகையை தவறாமல் திருப்பிச் செலுத்துவோருக்கு 6 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அறிவிப்பு 4: தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் பயின்றாலும், அவர்களுக்கு உயர் கட்டணச் சலுகைகள் மட்டுமின்றி, விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணங்களுக்கான உதவித் தொகையை வழங்கிடும் வகையில், “புதிய உயர் கல்வி உதவித் தொகை திட்டம்" ஒன்று செயல்படுத்தப்படும்.

அறிவிப்பு 5: நகர்ப்புறங்களில், சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு வரும் மூன்று ஆண்டுகளில், தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் உதவியோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டங்கள், தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் என பல்வேறு முறைகளின் கீழ் 30,000 குடியிருப்புக்கள் கட்டித் தரப்படும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு "கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் இந்த வீட்டு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும்.

அறிவிப்பு 6: தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

”தூய்மைப் பணியாளர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இந்நிலையில் வேலைநிறுத்தத்தை விடுத்து பணிகளுக்குத் திரும்புமாறு தூய்மைபணியாளர்களிடம் நான் அரசின் சார்பாக மிகுந்த அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தற்போது வரை காவலர்களின் பாதுகாப்பில் உள்ளனர். இவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், போராட்டத்தில் மீண்டும் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், முதல்வரின் புதிய அறிவிப்புகளால் போராட்டக்குழுவினர் மனமிறங்குவார்களா? என்கிற கேள்வியெழுந்துள்ளது.