தமிழ்நாடு

ஆளுநர் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை.. தமிழ்ச் சமூகம் கொதித்தளிப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநர் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை.. தமிழ்ச் சமூகம் கொதித்தளிப்பு
ஆளுநர் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டத்துடன், இந்தி மாத நிறைவு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தவறாக பாடப்பட்டது. அதாவது பாடலை பாடியவர்கள், தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி தெரியாமல் திக்கி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதற்கு பல தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழும்பியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.

இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது அதில் வரக்கூடிய, "தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும். இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.

திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி! திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு! தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும்  வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, “தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது திட்டமிட்டே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. ஆளுநரை திருப்தி படுத்த டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு செய்தார்களா? தேசிய கீதத்திலும் 'திராவிட' என்ற வார்த்தை வருகிறதே? அதை தவிர்த்து விட்டு பாட முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் என்றாலும் திராவிடம் என்றாலும் அவர்களுக்கு எட்டிக் காயாக கசக்கிறது. இதற்கு முன்பே சென்னையில் முன்னாள் ஆளுநர் கலந்து கொண்ட ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுத்து காஞ்சி சங்கராச்சாரியார் அடாவடி செய்தார். மற்றொருமுறை ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து முற்றிலும் புறக்கணிப்பட்டது.

இப்போது அது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமல்ல, 2021 டிசம்பர் 17 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி தமிழ்நாட்டின் மாநிலப் பாடலும் ஆகும். தமிழ்நாட்டின் மாநிலப் பாடலை அவமதிக்கும் வகையில் தமிழ்நாட்டு அரசின் சட்டத்தை மீறும் வகையில் ஆளுநர் செயல்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பவர் தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதும் அவமதிப்பதும் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்” என்று தெரிவித்துள்ளார்.