தமிழ்நாடு

ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம்.. செல்போன்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

வரதட்சணைக் கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவர் பயன்படுத்திய இரண்டு செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம்.. செல்போன்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
Rithanya Case
திருப்பூரில் வரதட்சணைக் கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவர் பயன்படுத்திய இரண்டு செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி, அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த ரிதன்யா வரதட்சணைக் கொடுமை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரது கணவர் கவின்குமார் மற்றும் அவரது பெற்றோருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

உயர்நீதிமன்றத்தில் கவின்குமார் மனு

ஜாமீன் பெற்று வீடு திரும்பியபோது, வீட்டில் ரிதன்யாவுக்குச் சொந்தமான இரண்டு மொபைல் போன்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்யக் காவல்துறைக்கு உத்தரவிடக் கோரியும் கவின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, "திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று ரிதன்யா தனது தோழிகளிடம் பேசிய விவரங்கள் அந்தப் போன்களில் உள்ளன. அவற்றை ஆய்வு செய்யுமாறு காவல்துறையினரிடம் கூறியபோது அவர்கள் மறுத்துவிட்டனர்" என்று கவின்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிமன்றம் உத்தரவு

அதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு, மொபைல் போன்களைப் புலன் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவை ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், ரிதன்யாவுக்குச் சொந்தமான இரண்டு செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.