சென்னை மின்சார ரயிலில் அட்டகாசம் செய்த மாணவர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் மின்சார ரயிலில் மாணவர்கள் அடிக்கடி பயணிகளுக்கு இடையூறு செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ரூட் தல விவாகரத்தில் சென்னை மாநிலக்கல்லூரி மாணவனை அடித்துக்கொன்றதாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி மோதிக்கொள்ளும் போக்கு தொடர்வதால் சென்னை காவல்துறை மற்றும் ரயில்வே காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மாணவர்கள் மோதலை தடுக்கும் வகையில், மாணவர்களுக்கு போலீஸ் தரப்பில் கடும் எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த நிலையில், திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை வரும் மின்சார ரயிலில் நேற்று பயணம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்னை வியாசர்பாடி அருகே ரயிலில் பயணிக்கும் பயணிகள் முகம் சுளிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பிக் கொண்டும், ஆபாசமாக பேசிக்கொண்டும் படியில் தொங்கியவாறு பயணம் செய்து கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதனை அடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து கல்லூரி மாணவர்கள் மீது மூன்று பிரிவுகள் கீழ் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.படியில் பயணம் செய்தல், ஆபாசமாக பேசுதல், ரயில் பயணிகளை அச்சுறுத்தல் ஆகிய 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.