சென்னை: கடந்த திமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார் ஐ பெரியசாமி. அப்போது அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன், ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் ஆகியோருக்கு, கடந்த 2008-ம் ஆண்டு திருவான்மியூரில் வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்து கொடுத்தார். இந்த மனைகளில் இருவரும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி லாபம் சம்பாதித்ததாக சொல்லப்படுகிறது.
மேலும், அதற்கு உடந்தையாக செயல்பட்டதாக ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், அப்போதைய வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் முருகையா, ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம், அவரது மகன் துர்கா சங்கர், அமைச்சர் ஐ.பெரியசாமி, டி. உதயக்குமார் ஆகிய 7 பேர் மீது கடந்த 2013-ம் ஆண்டு ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவானது. இதில் ஐ.பெரியசாமியை தவிர மற்ற அனைவர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டதோடு, அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்றம்.
இதனையடுத்து அமைச்சர் ஐ பெரியசாமி மீதான இந்த வழக்கு, எம்.பி, எம்.எல்.ஏகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பாக விசாரணைக்கு வந்தது. ஆக 28ம் தேதி நடைபெற்ற இந்த வழக்கில் அமைச்சர் ஐ பெரியசாமி ஆஜராகவில்லை, இதனால் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இன்றும் அமைச்சர் பெரியசாமி ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கு 9-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி வரும் 30ம் தேதி அமைச்சர் ஐ பெரியசாமி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.