தமிழ்நாடு

மருத்துவம் படிக்க சிறப்பு வகுப்புகள்- மலைவாழ் மக்களுக்கு இபிஎஸ் உறுதி

மீண்டும் அதிமுக அரசு அமைந்தவுடன் மலைவாழ் மக்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

 மருத்துவம் படிக்க சிறப்பு வகுப்புகள்- மலைவாழ் மக்களுக்கு இபிஎஸ் உறுதி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணம் மேற்கொள்ள நேற்று திருப்பத்தூருக்கு வருகை புரிந்தார்.இதில் எழுச்சி பயணமாக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று உரையாற்றினார்.

இபிஎஸ் சுற்றுப்பயணம்

அதன் பின்னர் இரண்டாவது நாளான இன்று (14) ஏலகிரி மலைப்பகுதி அத்தனாவூர் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை சந்தித்தார். அப்போது மலைவாழ் மக்கள் ஆரத்தி எடுத்தும், பாரம்பரிய நடனமாடியும் வரவேற்றனர்.அதன் பின்னர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் அப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் உங்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் சரியாக வருகிறார்களா எனவும் கேட்டறிந்தார்.

மருத்துவம் படிக்க சிறப்பு வகுப்பு

அவரை சந்திக்க வந்த பெண்களிடம் பூங்கொத்தை வாங்கி கொண்டு நலம் விசாரித்தார்.அதன் பின்னர் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக அரசு மீண்டும் அமையும்போது, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் ஏராளமானோர் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். அதேபோல மலைவாழ் மக்களுக்கு மருத்துவ படிப்பதற்கான சிறப்பு வகுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏலகிரி மலையில் சுற்றுலா தளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏலகிரி மலையில் சுற்றி உள்ள 14 கிராமங்களுக்கு சாலை வசதி முறையாக இல்லாத நிலையில், அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இங்கு அம்மா மினி கிளினிக் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.அதிமுக அரசு வந்தவுடன் இங்கு இருக்கக்கூடிய அனைத்து ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடு தரமான முறையில் அமைத்து தரப்படும்.

விலைவாசியை குறைக்க நடவடிக்கை

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் மலைவாழ் மக்கள் இதனால் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர். விலைவாசி குறைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.