தமிழ்நாடு

ஹீரோயிசத்தை காட்டுவதற்காக பதியப்பட்ட வழக்கு.. ராணுவ வீரர்கள் நல கூட்டமைப்பினர் புகார்

சீமான் வீட்டு பாதுகாவலரை தர தரவென இழுத்துச் சென்று கைது செய்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் நல கூட்டமைப்பினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

ஹீரோயிசத்தை காட்டுவதற்காக பதியப்பட்ட வழக்கு.. ராணுவ வீரர்கள் நல கூட்டமைப்பினர் புகார்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் நல கூட்டமைப்பினர் புகார்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் போலீசார் நேற்று ஒட்டினர். அதனை வீட்டு பணியாளர் சுபாகர், பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோர் கிழித்ததாகவும், துப்பாக்கியை காட்டி அமல்ராஜ் மிரட்டியதாகவும் கூறி நீலாங்கரை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

பாதுகாவலர் அமல்ராஜ் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர். அவரை நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் சட்டையை கிழித்து தரதரவென இழுத்து சென்று கைது செய்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டிக்கும் வகையிலும், காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய முன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் நல கூட்டமைப்பு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த புகாரில், சீமான் வீட்டில் பணியாற்றி வரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அமல்ராஜை நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் கைது செய்து அழைத்துச் சென்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  பிரவீன் ராஜும் அவருடன் வந்திருந்த காவலர்களும் அமல்ராஜை கடுமையாக தாக்கி சட்டையை பிடித்து இழுத்து உள்ளே தள்ளி அடித்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அவமானப்படுத்தியதுடன் மீண்டும் அவரை தரதரவென்று இழுத்து வெளியில் வந்து  மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர்.

அமல்ராஜின் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர். எந்த தவறும் செய்யாத அமல்ராஜ், தேச நலனுக்காகவும் தேசத்தை காப்பாற்றுவதற்காகவும் 25 கால வருடங்களுக்கு மேலாக தனது வாழ்க்கையை ராணுவத்தில் செலவழித்து பல்வேறு பதக்கங்களை பெற்று நாட்டிற்காக உழைத்தவர்.

தனது ராணுவ பணிக்கு பின்னர் ஏதாவது ஒரு வேலை செய்து நியாயமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலே பாதுகாப்பு அலுவலக வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரை தன்னுடைய ஹீரோயிசத்தை காட்டுவதற்காக அல்லது யாருக்கோ விசுவாசத்தை காட்டுவதற்காக சட்டத்தை மீறி சட்டத்திற்கு புறம்பாக பொய் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார் பிரவீன் ராஜேஷ்.

அதோடு இந்த விவரங்கள் குறித்து கேட் சென்ற அமல்ராஜ் மனைவியையும் அலைக்கழித்து அவமானப்படுத்தியுள்ளனர்.   ஏற்கனவே பிரவீன் ராஜேஷ் மீது   அவர் வேலை செய்த பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது. அறப்போர் இயக்கங்கள் குற்றம் சாட்டியிருக்கின்றன. வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்து இருக்கின்றார்கள்.

ஆகவே எந்தவித நேர்மையும் இல்லாத சட்டத்தை மதிக்காத ஒரு அதிகாரியாகவே இவர் செயல்பட்டு இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. அதுவும் மனித உரிமை மீறல்களை இவர் துணிச்சலாக செய்துள்ளார்.  மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் யாருடைய ஏவலுக்காகவும் இதுபோன்று செயல்படுகிறார்கள் என்பது மிகவும் வருந்ததக்கது.

காவல் ஆணையர் அருண் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக செயல்பட்ட ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் மற்றும் அவருடன் சென்ற காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய முன்னாள் முப்படை மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் நல கூட்டமைப்பு (தமிழ்நாடு) அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.