தமிழ்நாடு

சீமான் - விஜயலட்சுமி வழக்கு: இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரிய நிலையில் வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி சமரசம் செய்துகொண்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை இன்று (அக். 8) முடித்து வைத்து உத்தரவிட்டது.

சீமான் - விஜயலட்சுமி வழக்கு: இருவரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரிய நிலையில் வழக்கை முடித்து வைத்த  உச்ச நீதிமன்றம்!
சீமான் - விஜயலட்சுமி வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த திருமண மோசடி வழக்கில், இரு தரப்பினரும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரியதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை இன்று (அக்டோபர் 8, 2025) முடித்து வைத்து உத்தரவிட்டது.

வழக்கின் பின்னணி மற்றும் நீதிமன்றத்தின் அறிவுரை

நடிகை விஜயலட்சுமி, 2011-ஆம் ஆண்டு தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிச் சீமான் ஏமாற்றியதாகப் புகார் அளித்தார். 2012-ல் புகாரை வாபஸ் பெற்ற அவர், 2023-ஆம் ஆண்டு மீண்டும் புகாரை அளித்தார். இந்தப் புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

மார்ச் 2025-ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் "இருவரும் பேசிக் கொண்டு ஒரு முடிவுக்கு வர வேண்டும்" என அறிவுறுத்தியிருந்தனர். அப்போது, விஜயலட்சுமி தரப்பு நீதி கேட்ட நிலையில், சீமான் கைதுக்கான தடை நீட்டிக்கப்பட்டது.

பின்னர் நடந்த விசாரணையில், விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில், கைது தடை நீக்கப்படும்" என்றும், விஜயலட்சுமி, சீமானுடன் சுமூகமாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும்" என்றும் நீதிமன்றம் தெரிவித்தது

வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் சமரச முடிவு எட்டப்பட்டதற்கான தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை விஜயலட்சுமி குறித்து நான் முன்பு கூறிய அனைத்தையும் வாபஸ் பெறுகிறேன்; மேலும், எதிர்காலத்தில் அவரைப் பற்றி எந்தவொரு அவதூறு கருத்தும் கூற மாட்டேன்" என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. விஜயலட்சுமி தரப்பில், நான் சீமானால் பாதிக்கப்பட்டுள்ளேன்; எனது வாழ்வாதாரத்திற்கான உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என முதலில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் சீமான் மற்றும் விஜயலட்சுமி இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கோரிய நிலையில், வழக்கை முடித்து வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சீமான் மீது அளித்த புகாரைத் திரும்பப் பெறுவதாகவும், இரு தரப்பும் இனி இந்த விவகாரத்தில் எந்தவொரு வழக்கையும் மேல்முறையீடாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை எனவும் விஜயலட்சுமி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.