தமிழ்நாடு

திமிரியில் மதிய உணவிற்கு பிறகு பள்ளி சிறுவன் மர்ம மரணம் – பெற்றோர் அதிர்ச்சி

ஒரே உணவை 2 குழந்தைகள் சாப்பிட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர் புகார்

 திமிரியில் மதிய உணவிற்கு பிறகு பள்ளி சிறுவன் மர்ம மரணம் – பெற்றோர் அதிர்ச்சி
திமிரி அருகே மதிய உணவு சாப்பிட்ட பள்ளி சிறுவன் மர்ம மரணம் குறித்து போலீஸ் விசாரணை
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த தாமரைப்பாக்கம் புதிய காலனி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்- தீபா ஆகிய தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் 7 வயதில் மிதுன் என்ற மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல், அவரது பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணவை கட்டி கொடுத்துள்ளனர்.

பள்ளி சிறுவன் மர்ம மரணம்

அதன்பின்னர் பள்ளிக்கு சென்ற மிதுன் மதிய உணவு நேரத்தில் சாப்பிட்ட பின்னர் முகம் வீங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் சிறுவனை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தபோது வரும் வழியிலேயே பள்ளி சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், “மதிய உணவு அருந்திய பிறகு பள்ளி மாணவனின் முகம் வீங்கிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் சாப்பிட்ட உணவில் ஏதாவது பிரச்னை இருந்திருக்கலாம்” என தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதைத்தொடர்ந்து உயிரிழந்த பள்ளி சிறுவனின் பெற்றோர்கள் கூறுகையில், தங்களுடைய 2 குழந்தைகள் மதிய உணவு அருந்திய நிலையில், ஒரு குழந்தை மட்டும் திடீரென உயிரிழந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்து வருவதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இமயவர்மன் மற்றும் ஆற்காடு நகர காவல்துறை மர்மமான முறையில் உயிரிழந்த 7 வயது பள்ளி சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பள்ளி சிறுவன் அருந்திய உணவில் ஒவ்வாமையில் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் உடலில் பல்வேறு பிரச்னை காரணம் என பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.