தமிழ்நாடு

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சரஸ்வதி அலங்காரம்: வீணையுடன் காட்சியளித்த அன்னையை காண திரண்ட பக்தர்கள்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று (அக். 2) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அம்மன் வீணையுடன் கூடிய பிரத்யேக சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சரஸ்வதி அலங்காரம்: வீணையுடன் காட்சியளித்த அன்னையை காண திரண்ட பக்தர்கள்!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சரஸ்வதி அலங்காரம்!
புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் நவராத்திரி உற்சவத்தின் ஒரு பகுதியாக, இன்று (அக்டோபர் 2) சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு அன்னை சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

சரஸ்வதி அலங்காரத்தில் காமாட்சி அம்மன்

நவராத்திரி உற்சவத்தையொட்டி, கோயிலில் அழகிய பொம்மைகளால் கொலு மண்டபம் அமைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. காமாட்சி அம்மன் நாள்தோறும் வெவ்வேறு அலங்காரங்களில் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறார்.

அந்த வகையில், சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று காமாட்சி அம்மனுக்கு, பால், தயிர், இளநீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அம்மனுக்கு வெள்ளை நிறப் பட்டாடை உடுத்தப்பட்டு, மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

கிரீடம் தரித்து, கைகளில் சரஸ்வதி வீணையை வைத்திருப்பது போன்ற பிரத்யேக சரஸ்வதி அலங்காரத்தில் காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து, சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன், லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளுடன் பல்லாக்கில் நவராத்திரி கொலு மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

வீணையுடன் சரஸ்வதி அலங்காரத்தில் காட்சியளித்த காமாட்சி அம்மனை காண உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர். கொலு மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு, தீப தூப ஆராதனைகள் காட்டப்பட்டன.