தமிழ்நாடு

சென்னையில் வருமான வரி சோதனை..  கோடிக்கணக்கில் ரூ.2000 நோட்டுகள் சிக்கியதால் பரபரப்பு

சென்னையில் யாக்கூப் என்பவர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் 9.50 கோடி போலி  இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சென்னையில் வருமான வரி சோதனை..  கோடிக்கணக்கில் ரூ.2000 நோட்டுகள் சிக்கியதால் பரபரப்பு

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வரும் யாக்கூப் என்பவரிடமிருந்து பத்து கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறுவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருமான வரித்துறையினர் நேற்று இரவு (பிப். 5) யாக்கூப் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்த ஒரு பையில் கட்டுக்கட்டாக இரண்டாயிரம் ரூபாய்  மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  

மேலும் படிக்க: தைப்பூசம், தொடர் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை

மேலும், கைப்பற்றப்பட்ட பணத்திற்கான தகுந்த ஆவணங்கள் இல்லாததால் கள்ள நோட்டுகள் ஏதேனும் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு இந்தியாவில் புழக்கத்தில் விடப்படுகிறதா என்பதை சோதனை செய்ய என்.ஐ.ஏவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர்.

அதில், 50 லட்சம் ரூபாய் மட்டுமே ஒரிஜினல் நோட்டுகள் என்றும் மற்ற 9.50 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்துமே குழந்தைகள் விளையாடும் போலி நோட்டுகள் என்பதும் தெரியவந்து. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்  தகுந்த ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த 50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும், யாக்கூப்பை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, மீதமுள்ள 9.50 கோடி போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலி ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தது..? எதற்காக வைத்திருந்தனர் என்பது தொடர்பாக யாக்கூப்பின் நண்பர் ரஷித் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை.. தமிழக அரசுக்கு அண்ணா தொழிற்சங்கம் கெடு

மேலும், ஹவாலா பணத்தை கைமாற்றும் போது மேலே உண்மையான நோட்டுகளை வைத்து மறைத்து கீழே போலி நோட்டுகளை வைத்து மோசடி செய்ய முயன்றனரா? அல்லது வேறு குற்றச்செயல்களில் ஈடுபட முயன்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.