தமிழ்நாடு

"இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும்"- பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தக் கோரி பிரதமர் மோடிக்குக் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


Chief Minister Stalin's letter to the Prime Minister
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தக் கோரியும், மீனவர் நலன் சார்ந்த பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை எழுப்பக் கோரியும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் வலியுறுத்தல்

இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் வருகை தந்திருக்கும் இந்த வேளையில், தாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் முக்கியக் கோரிக்கைகளைப் பிரதமர் மோடி எழுப்ப வேண்டும் என்று கோரிக் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், கச்சத்தீவு மீட்பு, இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல், மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை மற்றும் திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்துதல், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதால் உண்டாகும் பாதிப்பு, கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றை இலங்கை பிரதமரிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை பிரதமரின் இந்தியப் பயணம்

இலங்கையின் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியா வந்துள்ள ஹரிணி அமரசூரிய இன்று காலையில் இந்தியா வந்தடைந்தார். வரும் 18ஆம் தேதி வரை இந்தியாவில் இருக்கும் அவர், பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதில் இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறவுள்ளன.

இலங்கையின் கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகிக்கும் பிரதமர் அமரசூரிய, டெல்லியில் உள்ள ஐஐடி மற்றும் என்ஐடிஐ ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.