தமிழ்நாடு

வேலூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – மக்கள் கடும் அவதி

வேலூரில் சுமார் அரை மணி நேரத்துக்கு பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

 வேலூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – மக்கள் கடும் அவதி
வேலூரில் பெய்த கனமழையால் வீடுகளில் மழைநீர் புகுந்தது
வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலையில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

வீடுகளில் புகுந்த மழைநீர்

வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், மாலையில் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, இரவு நேரத்தில் திடீரென பலத்த கனமழைமழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரத்திற்க்கு மேலாக பெய்தது. குறிப்பாக, வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சத்துவாச்சாரி, புதிய பேருந்து நிலையம், வேலப்பாடி, பாகாயம், அடுக்கம்பாறை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திடீரெனப் பெய்த இந்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.

வேலூர் மாவட்டத்தில் பகலில் 98 டிகிரி ஃபாரன் ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்திய நிலையில், இரவில் கனமழை மற்றும் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொதுமக்கள் அவதி

வேலூர் மாநகருக்குட்பட்ட முள்ளிப்பாளையம் கே.கே.நகர் முதல் தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட நிலையில், சிமெண்ட் சாலை முறையாக அமைக்காமல் வீடுகளை காட்டிலும் உயர்த்தி போட்டதாலும், புதியதாக கட்டிய கால்வாயை பாதியிலேயே நிறுத்தியதாலும், சுமார் 10 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். இதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.