தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்: தட்டிக் கேட்ட 5 மாணவர்கள் மீது வழக்கு பதிவு!

நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்: தட்டிக் கேட்ட 5 மாணவர்கள் மீது வழக்கு பதிவு!
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்: தட்டிக் கேட்ட 5 மாணவர்கள் மீது வழக்கு பதிவு!
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் உள்ள ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், உடன் பயிலும் மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் ஒரு பேராசிரியரை எதிர்த்துக் கேள்வி கேட்ட 5 கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது, கல்வி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு அத்துமீறிய பேராசிரியர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல், அவரைத் தட்டிக் கேட்ட மாணவர்கள் மீது பிரிவுகள் பாய்ந்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.

வட்டாரச் செய்தியின்படி, சில நாட்களுக்கு முன்பு இண்டஸ்ட்ரியல் விசிட் என்ற பெயரில் மாணவர்களுடன் மூணார் பகுதிக்குச் சுற்றுலா சென்றபோது, அங்கிருந்த பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜ் உடன் சென்றிருந்த கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவர்கள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுற்றுலா முடிந்து திரும்பிய நிலையில், நேற்று (அக். 9) இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக மாணவர்கள் பேராசிரியரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, நேற்று நள்ளிரவு சேரன்மகாதேவி காவல்துறையினர் கல்லூரியில் பயின்று வரும் 5 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், பாலியல் தொந்தரவுக் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மீது எந்தவித சட்ட நடவடிக்கைக்கும் தயாராகாமல் போக்கு காட்டி வருவதாக மாணவர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நிர்வாகத் தரப்பில் இருந்து விளக்கம் கேட்க முயற்சித்தும் பதிலளிக்க மறுத்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்தப் பேராசிரியரைக் கல்லூரி நிர்வாகம் தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உள்விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சக மாணவியின் பாதுகாப்பிற்காகக் குரல் கொடுத்த மாணவர்கள் மீது பதியப்பட்டுள்ள இந்த வழக்கு, சமூக வலைத்தளங்களில் பலத்த விவாதப் பொருளாகியுள்ளது.