தமிழ்நாடு

நிதி மோசடி வழக்கு: தேவநாதன் போட்ட திட்டம் என்ன?.. போலீசார் தீவிர விசாரணை..

நிதி நிறுவனத்தில் மோசடி வழக்கில் கைதான தேவநாதனிடம் போலீஸ் காவலில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதி மோசடி வழக்கு: தேவநாதன் போட்ட திட்டம் என்ன?.. போலீசார் தீவிர விசாரணை..
நிதி நிறுவனத்தில் மோசடி வழக்கில் கைதான தேவநாதனிடம் விசாரணை

சென்னை, மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ‘மயிலாப்பூர் ஹிந்து பெர்மனன்ட் ஃபண்ட்’ எனும் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனருமான தேவநாதன் யாதவ் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்த நிதி நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்த வண்ணம் இருந்தனர்.

இந்த மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி அந்த நிறுவனத்திற்கு முன்பாக 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கடந்த 13ஆம் தேதி திருச்சியில் தேவநாதன் யாதவை கைது செய்தனர்.

இதனையடுத்து, நிதி நிறுவன மோசடி தொடர்பாக தேவநாதன் தொடர்புடைய 11 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 4 லட்சம் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த 18ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தி.நகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகள் என 12 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் நிதி நிறுவனம் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

இந்நிலையில், தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்தனர். மேலும், தேவநாதனை ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க  பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

அதன் அடிப்படையில் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து தேவநாதன் உள்பட 3 பேரிடம்  விடிய விடிய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார்களின் அடிப்படையில் இதுவரை 25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், 500 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. அவர் மீது சுமார் 800 புகார்கள் இதுவரை வந்துள்ளதாக கூறப்படுகிறது. மோசடி செய்த பணத்தில் பினாமிகள் பேரில், எந்த ஊர்களில் அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்? வேறு என்னென்ன தொழில்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளாரா? என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

குடும்பத்தினரின் பெயரில் வேறு தொழில்களில் பண முதலீடு செய்துள்ளாரா? உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மோசடி செய்வதற்காக திட்டமிட்டே தன்னுடைய தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை இயக்குனர்களாக நியமித்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு மாத சம்பளம் அல்லது மதிப்பூதியம் எவ்வளவு வழங்கப்பட்டது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் நிதி நிறுவனத்தில் இயக்குனர்களாக இருந்த தேவநாதனின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் குணசீலனிடமும், மகிமை நாதனிடமும் தனித்தனியாக விசாரணை நடந்து வருகிறது.