தமிழ்நாடு

சேலம் அருகே மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து நகைகள் கொள்ளை...மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை

மூதாட்டியின் ஆடைகள் கலைந்த நிலையில் இருந்ததால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற்று கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சேலம் அருகே மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து நகைகள் கொள்ளை...மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை
சேலம் அருகே கொலை செய்யப்பட்ட மூதாட்டி
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள சின்ன ஏரிக்காடு காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (68). இவரது கணவர் ஜனகராஜ் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் ராஜா (45). முருகானந்தம் (43) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

மூதாட்டி கொடூரமாக கொலை

முருகானந்தம் திருமணம் ஆகி தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டு குடும்பத்துடன் திருப்பூர் பல்லடம் பகுதியில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் ராஜா சேலத்தில் நகைக்கடையில் வேலை செய்து வந்த நிலையில் ராஜாவிடம் மூதாட்டி சரஸ்வதியும் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாடு மேய்க்க சென்ற மூதாட்டி சரஸ்வதி மாலை 7 மணி ஆகியும் வீடு திரும்பாததால் மூதாட்டியை அவர்கள் தேடி சென்றுள்ளனர். அப்போது அவர்களுடைய தோட்டத்தில் ஆடைகள் கலைந்த நிலையில் தலையில் கல்லால் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் மூதாட்டி சரஸ்வதி கிடந்துள்ளார்.

நகைகள் திருட்டு

மேலும் மூதாட்டி காதில் இருந்த தோடு, மற்றும் மூக்குத்தி ஆகியவற்றையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து தீவட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ அறிந்து டிஐஜி உமா, ஏடிஎஸ்பி சோமசுந்தரம், டிஎஸ்பி சஞ்சீவ் குமார், இன்ஸ்பெக்டர் செந்தில் உள்ளிட்டோர் தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது ஆடைகள் கலைந்த நிலையில் இருப்பதால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற்று கொலை செய்யப்பட்டாரா என்ற பல்வேறு கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு மேய்க்க சென்ற மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.