தமிழ்நாடு

நள்ளிரவில் கென்யா நாட்டுப் பெண்கள் செய்த அட்டகாசம்... காவல்துறைக்கு வந்த தலைவலி!

மதுபோதையில் பாரில் வந்து பிரச்சனை செய்த கென்யா நாட்டை சேர்ந்த பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நள்ளிரவில் கென்யா நாட்டுப் பெண்கள் செய்த அட்டகாசம்... காவல்துறைக்கு வந்த தலைவலி!
நள்ளிரவில் கென்யா நாட்டுப் பெண்கள் செய்த அட்டகாசம்... காவல்துறைக்கு வந்த தலைவலி!

சென்னை எழும்பூர் லாங்ஸ் கார்டன் சாலையில் பிரபல பார் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு நேற்று (நவ. 10) இரவு மதுபோதையில் வந்த மூன்று கென்யா நாட்டுப் பெண்கள் உள்ளே செல்ல அனுமதிக்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

மேலும் சாலையில் சென்ற பொதுமக்களுக்கும் தொந்தரவு கொடுக்கும் வகையில் அந்த பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த எழும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மதுபோதையில் இருந்த மூன்று பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மதுபோதையில் தொந்தரவு செய்த பெண்கள் கென்யா நாட்டை சேர்ந்த விஜினியா, அனஸ்தடியா, போசியா மூவண்டை ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மருத்துவ காரணத்திற்காக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னதாக தமிழ்நாட்டிற்கு வந்து தி நகரில் உள்ள அப்பார்ட்மெண்டில் தங்கி ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒரு பாரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் எழும்பூரில் உள்ள பாருக்கு வந்து உள்ளே அனுமதிக்குமாறு கூறி சுமார் 2 மணி நேரமாக பிரச்சனை செய்து வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து எழும்பூர் போலீசார் பெண்கள் மீது ஆபாசமாக பேசுதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் மூவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.