Gold Smugglers Tortured Gang Arrest in Chennai : கன்னியாகுமரி மாவட்டம் வருகபலை கிராமத்தைச் சேர்ந்தவர் சாஜி மோன் என்பவரை கடந்த நான்கு மாதங்களாக திருவல்லிக்கேணி வெங்கடேசன் தெருவில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து இருப்பதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாஜி மோனை மீட்டனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சாஜி மோன் துபாயில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததாகவும், ரம்ஜான் நேரத்தில் சரியான வேலை இல்லாததால் துபாயில் பழக்கமான பென்னி, மாலிக் ஆகியோரிடம் வேறு ஏதாவது வேலை இருக்கிறதா? என கேட்டதாக தெரிகிறது.
குருவி வேலை இருக்கிறது செய்கிறாயா? என்று இருவரும் கேட்டனர். பத்திரமாக கொண்டு போய் சேர்த்தால் சென்னையில் இருக்கும் எங்கள் பிசினஸ் பார்ட்னர்கள் 5 லட்சம் தருவார்கள் என ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. இதற்கு சாஜிமோன் ஒப்புக்கொண்டு நான்கு மாதங்களுக்கு முன்பு துபாயிலிருந்து 3 தங்க கட்டிகளை (2 கோடி மதிப்பிலானது என கூறப்படுகிறது) ஆசனவாய் வழியாக உடலில் மறைத்து வைத்து சென்னை விமான நிலையம் கொண்டு வந்து, காத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சாஜி மோன் கொண்டு வந்த நகையை வாங்கி செல்வதற்கு தயாராக இருந்த நான்கு பேர் அவரை சேப்பாக்கம் வெங்கடேசன் தெருவில் உள்ள லாட்ஜுக்கு அழைத்து வந்தனர். அங்கு வந்து பார்த்தபோது சாஜி மோனிடம் தங்கக் கட்டிகள் மாயமானதாக கூறப்படுகிறது.
சாஜி மோனிடம் கேட்டபோது, சென்னை விமான நிலையத்தில் உங்கள் பெயரைச் சொல்லி மற்றொரு கும்பல் வாங்கி சென்று விட்டது? என முதலில் கூறியதாக தெரிகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை கடுமையாக இருந்ததால் விமான நிலைய கழிப்பறையில் வைத்து விட்டேன் என முன்னுக்குபின் முரணாக பேசியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், கடந்த நான்கு மாதங்களாக சேப்பாக்கம் லாட்ஜில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் சாஜிமோனுக்கு கண்களுக்கு கீழ் ரத்த காயம் மற்றும் வீக்கம், உள்ளங்களில் தீக்காயம், முதுகில் காய தழும்பு ஆகியவை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சேப்பாக்கத்தை சேர்ந்த ஆசிப் பயஸ், அண்ணா சாலையைச் சேர்ந்த முகமது ஆலிம் ஆப்கான், லாட்ஜ் ரூபாய் ஒடிசாவை சேர்ந்த வருந்தரதாஸ், மதுரையைச் சேர்ந்த கோபி கண்ணன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தலைமறைவாக இருந்த லாட்ஜ் உரிமையாளர் இம்ரானையும் கைது செய்தனர்.