தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மனு.. தமிழக அரசுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பரந்தூர் விமான நிலையத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள மகாதேவி மங்கலம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக மனு..  தமிழக அரசுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை விமான நிலையத்தில் நெருக்கடியை குறைக்கும் வகையில், பரந்தூரில், 34 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், பசுமை விமான நிலையம் அமைக்க அரசு முடிவு செய்தது. 2030 ம் ஆண்டுக்குள் இந்த விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் உள்ள 20 கிராமங்களில், 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில், ஆயிரத்து 972 ஏக்கர் அரசு நிலத்தையும், 3 ஆயிரத்து 774 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 

இதில், மகாதேவி மங்கலம் கிராமத்தில் 217 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி, கடந்த 2024 ம் ஆண்டு மார்ச் மாதம் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும், மகாதேவி மங்கலம் கிராமத்தில் ஒரு ஏக்கர் 69 சென்ட் நிலத்தின் உரிமையாளரான சிவலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மாவட்ட சிறப்பு வருவாய் அதிகாரி பிறப்பித்துள்ள இந்த நோட்டீஸ், தமிழ்நாடு தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்காக நிலம் கையகப்படுத்தல் சட்டத்துக்கு விரோதமானது எனவும், நிலம் கையகப்படுத்துவதற்கு தெரிவித்த ஆட்சேபங்களை பரிசீலிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 7 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.