தமிழ்நாடு

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலையை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மனு.. ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்..!

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. 

அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலையை எதிர்த்து  லஞ்ச ஒழிப்புத்துறை மனு..  ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்..!
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுதலையை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மனு.. ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்..!

கடந்த 2006 - 2011 திமுக ஆட்சி காலத்தில் வருவாய் மற்றும் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக இருந்த போது,  வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 19 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. 

இந்த வழக்கில் இருந்து  ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து, திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம்,  2017ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து 2018 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

 இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் மூத்த ஏ.கே.ஶ்ரீராம் மற்றும் அமைச்சரின் குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர் அருண் அன்புமணி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். 

குடும்ப உறுப்பினர்கள் வருமானத்தை   ஐ.பெரியசாமி வருமானத்துடன் இணைத்தது தவறு எனவும் வழக்கு தொடர்வதற்கு முன்னதாகவே அனைவரும் தனித்தனியாக வருமான வரி செலுத்தி வந்ததாகவும் அவர்கள்  வாதிட்டனர்.

மேலும், சொத்துகள் முறையாக கணக்கிடப்படவில்லை எனவும், விவசாயம் மூலம் தங்களுக்கு வந்த வருமானத்தை இரு மகன்களும்  வருமான வரி கணக்கில்  காட்டிய நிலையில், அதனை கணக்கில் கொள்ளாமல் லஞ்ச ஒழிப்புத் துறையினர், தாங்களாகவே ஒரு தொகையை கணக்கிட்டு, அதனை முறைகேடாக சேர்த்தது என  குற்றம் சாட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.