தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள்.. களைகட்டும் வீர விளையாட்டு!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று புகழ்பெற்ற உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி உற்சாகமாகத் தொடங்கியது.

பாலமேடு ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள்.. களைகட்டும் வீர விளையாட்டு!
Palamedu Jallikattu
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஒன்றான பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 16) மஞ்சமலை ஆற்றுத் திடலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வீரர்களுக்கும் காளைகளுக்கும் உரிய உடற்தகுதி பரிசோதனைகள் செய்யப்பட்டு, உறுதிமொழி ஏற்புடன் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கின.

தாமதமானத் தொடக்கமும் கோயில் காளைகளும்

முன்னதாக, காலை 7 மணிக்குத் தொடங்க வேண்டிய போட்டியைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், அவரது வருகையில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, காலை 9 மணி அளவில் போட்டிகள் தொடங்கின. வழக்கமான முறைப்படி, முதலில் ஊர் கோயில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டு வருகின்றன.

களத்தில் 1000 காளைகள்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

இந்தப் போட்டியில் சுமார் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 12 சுற்றுகளாகப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவசர சிகிச்சைகளுக்காக 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். காயம் அடையும் வீரர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிசான் கார் முதல் தங்க நாணயங்கள் வரை: குவியும் பரிசுகள்

காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வாரி வழங்கப்படுகின்றன. சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு நிசான் கார், டிராக்டர், பைக் மற்றும் தங்க நாணயங்கள் மெகா பரிசுகளாகக் காத்திருக்கின்றன. இது தவிர பீரோ, கட்டில், சைக்கிள் எனப் பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களும் சுற்றுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகின்றன.

மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் மாவட்ட எஸ்பி அரவிந்த் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.