தமிழ்நாடு

வடசென்னையை ஆட்டிப் படைத்த தாதா.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

வடசென்னையின் பிரபல தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று (அக். 8) உயிரிழந்தார்.

வடசென்னையை ஆட்டிப் படைத்த தாதா.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!


வடசென்னையின் மிகவும் பிரபலமும் அஞ்சப்படுவதுமான தாதாவாக அறியப்பட்ட நாகேந்திரன், உடல்நலக் குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சிறைக்குள் இருந்தபடியே வடசென்னையை இவர் கட்டுப்படுத்தியதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாதா நாகேந்திரன் பின்னணி

வியாசர்பாடி பகுதியில் வளர்ந்த நாகேந்திரன், ஆரம்பத்தில் ஒரு குத்துச்சண்டை வீரராக வேண்டும் என்று விரும்பியவர். ஆனால், காலப்போக்கில் அவர் வழிமாறிச் சென்று A+ கேட்டகிரி ரவுடியாக மாறினார்.

1990-களில் இவர் மறைந்த ரவுடி வெள்ளை ரவி மற்றும் நண்பர் விஜி ஆகியோருடன் இணைந்து வடசென்னையில் மும்மூர்த்திகள் போல வலம் வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காலத்தில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூலில் இவர்களது ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.

முதல் வழக்கு:

1990-ஆம் ஆண்டில் ஒரு கொலை முயற்சி வழக்கில் முதன்முறையாக நாகேந்திரன் வியாசர்பாடி போலீசாரால் சிறையில் அடைக்கப்பட்டார். 1991-ல் அவர் மீது முதல் கொலை வழக்கு பதிவானது.

சுப்பையா கொலை:

1990-களில் பிரபல தாதா சுப்பையா கும்பலுக்கும் வெள்ளை ரவி கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. ஸ்டான்லி அரசு மருத்துவமனை வார்டுக்குள்ளேயே வைத்து வெள்ளை ரவியை சுப்பையா கொலை செய்த சம்பவம் அக்காலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூரச் சம்பவம் பல திரைப்படங்களில் காட்சிகளாக இடம்பெற்றது. தொடர்ந்து, வெள்ளை ரவியையும், நாகேந்திரனையும் ரவுடி சேரா கும்பலால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்னர், 2007-ஆம் ஆண்டு வெள்ளை ரவி ஓசூரில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

வடசென்னை தாதா:

வெள்ளை ரவிக்குப் பிறகு, நாகேந்திரன் புதிய ரவுடிக் கும்பலை உருவாக்கினார். இதன் பிறகே அவர் வடசென்னையின் முக்கியத் தாதாவாக மாறினார். 1997-ல் வியாசர்பாடியைச் சேர்ந்த அ.தி.மு.க வட்டச் செயலாளர் ஸ்டான்லி சண்முகத்தைக் கொலை செய்த வழக்கில் கைதான நாகேந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நாகேந்திரன் மீது ஐந்து கொலை வழக்குகள், 14 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 28 வழக்குகள் இருப்பதாகக் காவல்துறை தெரிவிக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் மரணம்

சிறையில் இருந்து இயக்கம்: நாகேந்திரன் ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையில் இருந்தபோதிலும், தன்னுடைய கூட்டாளிகள் மூலம் வடசென்னையைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு:

சிறையில் இருந்தபடியே ஆம்ஸ்ட்ராங் கொலைக்குத் திட்டம் தீட்டியதாக நாகேந்திரன் கைது செய்யப்பட்டு, அந்த வழக்கில் A1 குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நாகேந்திரன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு இன்று (அக். 8) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.