தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்!

பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட'த்தை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்!
CM Stalin
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, போட்டா-ஜியோ ஆகிய அமைப்புகள் திட்டமிட்டிருந்த காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மத்தியில், தமிழ்நாடு அரசு புதிய மற்றும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) அறிவித்துள்ளது.

தொடரும் பேச்சுவார்த்தைகள்

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, அரசிடம் இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த சங்கங்களை அழைத்து அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடங்கிய குழு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது.

நேற்று (ஜனவரி 2) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இன்று (ஜனவரி 3) ஓய்வூதியத் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. இதன்படி, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

'TAPS' திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள இந்தப் புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) கீழ் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் முக்கியப் பயன்கள் பின்வருமாறு:

1) உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்: மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த 50 சதவீத ஓய்வூதியத்தை வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்புடன் ஓய்வூதிய நிதிக்குத் தேவைப்படும் கூடுதல் நிதியை முழுவதுமாக தமிழ்நாடு அரசே ஏற்கும்.

2) அகவிலைப்படி உயர்வு: 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு, அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையாக ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

3) குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால், அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப உறுப்பினர்களுக்குக் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

4) பணிக்கொடை: அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும்போது அல்லது பணிக்காலத்தில் இறக்க நேரிடும்போது, அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ₹25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

5) குறைந்தபட்ச ஓய்வூதியம்: புதிய TAPS திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

6) சிறப்பு கருணை ஓய்வூதியம்: பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பணியில் சேர்ந்து, புதிய TAPS திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றிப் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

முதல்வர் உறுதி

இந்த TAPS திட்டத்தைச் செயல்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக ரூ.13,000 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.11,000 கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். தற்போது கடுமையான நிதிச்சூழல் நிலவினாலும், இந்தச் செலவினங்களை அரசே முழுமையாக ஏற்கும் என்று முதல்வர் உறுதியளித்துள்ளார்.