தமிழ்நாடு

பள்ளி மாணவன் மர்ம மரணம்: கிணற்றில் சடலமாக மீட்பு- தடயவியல் நிபுணர்கள் ஆய்வு!

திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பள்ளி மாணவன் மர்ம மரணம்: கிணற்றில் சடலமாக மீட்பு-  தடயவியல் நிபுணர்கள் ஆய்வு!
Mysterious death of school student!
திருப்பத்தூர் அருகே அரசு உதவி பெரும் பள்ளியின் விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவன் காணாமல்போன நிலையில், அதே பள்ளியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பெற்றோர் மற்றும் பல்வேறு தரப்பினரும் நீதி கேட்டுப் போராடி வருகின்றனர்.

மாயமான மாணவன் சடலமாக மீட்பு

ஆகஸ்ட் 1ஆம் தேதி முகிலன் பள்ளி வகுப்புகளுக்கு வராததால், பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளது. மகனைக் காணவில்லை என அதிர்ந்துபோன பெற்றோர், திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தனிப்படை அமைத்த போலீசார், இரண்டு நாட்களாகத் தேடி வந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 3) அதே பள்ளியில் உள்ள மூடப்பட்டிருந்த கிணற்றில் முகிலன் சடலமாக மீட்கப்பட்டான்.

மாணவன் சடலமாக மீட்கப்பட்டதைக் கண்ட பெற்றோர் கதறி அழுதனர். பள்ளியில் உள்ள கிணற்றின் முகப்பு இரும்புக் கம்பியால் பூட்டப்பட்டிருந்த நிலையில், முகிலன் எவ்வாறு அந்தக் கிணற்றில் விழுந்தான் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உறவினர்கள் போராட்டம்

இந்த மரணத்துக்கு நீதி கேட்டு, பள்ளியை மூட வேண்டும், பாதிரியாரைக் கைது செய்ய வேண்டும், மகனின் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, முகிலனின் உறவினர்கள் பல்வேறு கட்சிகளுடன் இணைந்து சாலை மறியல் மற்றும் காவல் நிலையம் முற்றுகை போன்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர். நீண்ட நேரம் நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு, மாணவன் முகிலனின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதித்தனர்.

இருப்பினும், பாதிரியாரைக் கைது செய்து பள்ளிக்குச் சீல் வைக்க வேண்டும் எனக் கூறி உடலை வாங்க மறுத்ததால், முகிலனின் உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் தடயவியல் ஆய்வு

இந்தச் சம்பவம் தொடர்பாகத் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பாதிரியார் ஜேசு மாணிக்கம் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் வேலூர் தடயவியல் நிபுணர்கள், திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர், மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் தங்கி கல்வி பயின்று வரும் சக மாணவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.