தமிழ்நாடு

தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல்கள்.. தரவுகள் தர மறுக்கும் மைக்ரோசாஃப்ட்!

வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கும் மெயில் ஐடிகள் குறித்த தரவுகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தரமறுப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல்கள்.. தரவுகள் தர மறுக்கும் மைக்ரோசாஃப்ட்!
Bomb Threats
கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை உட்படத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 550-க்கும் மேற்பட்ட இ-மெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக, தீவிரவாத தடுப்புப் பிரிவு (ATS) மற்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மிரட்டல் ஐடிகளின் மர்மம்

இந்த மிரட்டல் வழக்குகளை விசாரிக்கும் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார், விடுக்கப்பட்ட மெயில்களில் 95 சதவீதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் Hotmail மற்றும் Outlook மின்னஞ்சல் சேவைகளிலிருந்து அனுப்பப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மர்ம நபர்கள் உருவாக்கும் இந்த மெயில் ஐடிகள், அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் தானாகவே மறைந்து விடும் வகையில் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மிரட்டல் அனுப்பப்பட்டு வருகிறது.

இத்தகைய இ-மெயில் மிரட்டல்கள் தொடர்பாகத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இதுவரை 25 வழக்குகளும், சைபர் கிரைம் போலீசார் 15-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உலக அளவில் பரவிய தமிழக தலைவர்கள் பெயரிலான மிரட்டல்

தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் பெயரில் உருவாக்கப்பட்ட இ-மெயில் ஐடிகளிலிருந்து விடுக்கப்பட்ட மிரட்டல்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் வழக்குப் பதிவுக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவில் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 12 மாநிலங்களில் 12 வழக்குகளும், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா மட்டுமல்லாமல் இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தரவுகள் தர மறுக்கும் மைக்ரோசாஃப்ட்

மிரட்டலுக்குப் பயன்படுத்தப்பட்ட 95 சதவீத மெயில் ஐடிகள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேவையிலிருந்து வருவதால், அதிகாரிகள் பலமுறை தரவுகள் கேட்டு அந்நிறுவனத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளனர். எனினும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதுவரை தரவுகளைத் தர இயலாது என்று கூறி வருவதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

இந்தச் சிக்கலைத் தொடர்ந்து, விரைவில் மர்ம நபர்களை அடையாளம் காணும் நோக்கில், ஒரு புதிய வியூகம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், அதன் மூலம் இன்னும் சில தினங்களில் குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவர் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.