தமிழ்நாடு

“மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” - யூடியூபர் இர்பான் விவகாரத்தில் அமைச்சர் உறுதி

குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம்” - யூடியூபர் இர்பான் விவகாரத்தில் அமைச்சர் உறுதி
யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிநவீன கேத் லேப் அதிநவீன ஒருங்கிணைந்த நுரையீரல் ஆராய்ச்சிகூடம் திறப்பு விழா மற்றும் அவசர மருத்துவ உறுதி வழங்கும் விழாவும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பரிசோதனை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சுகாதாரம் மற்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, குத்துவிளக்கேற்றிய பின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “யூடியூபர் இர்பான் கடந்த மே மாதம் அவரது மனைவியின் கருவில் இருக்கக்கூடிய குழந்தையை துபாயில் ஸ்கேன் எடுத்து அதனை வெளியிட்டார். துபாயில் அதற்கான தடை இல்லாததால் தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். தகவல் தெரிந்தவுடன் மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் சார்பில் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அப்போது நோட்டீஸ் கொடுத்தோம்.

பின்னர் இனிமேல் இதுபோன்று செய்யமாட்டேன் என வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் தான், இர்பான் கடந்த வாரம் மருத்துவமனையில் அவருடைய குழந்தைக்கு தொப்புள்கொடியை அவரே அறுத்து எடுத்து அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இது கண்டிக்ககூடிய ஒரு விஷயம்.!

மருத்துவமனை அறுவை அரங்கிற்குள் மருத்துவர் அல்லாத ஒருவர்  உள்ளே சென்று தொப்புள்கொடியை துண்டித்திருப்பது என்பது தேசிய மருத்துவ சட்டத்தின்படி தண்டனைக்குரிய சட்டம் மருத்துவச் சட்ட விதிகளை மீறிய இர்பான் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். மேலும், செம்மஞ்சேரி காவல் நிலையத்திலும் இர்பான் மீது மருத்துவக்கல்வி இயக்குனரகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

அவர் மீது மட்டுமின்றி அவரை மருத்துவமனைக்குள் அனுமதித்த தனியார் (ரெயின்போ) மருத்துவமனை மீதும் பெண் மருத்துவர் நிவேதிதா மீதும் நடவடிக்கை எடுக்க கோரி செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பெண் மருத்துவர் பயிற்சி மேற்கொள்ள தடை விதிக்ககோரி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கிற்கும் கடிதம் தரப்பட்டுள்ளது. தொப்புள் கொடி அறுத்த விவகாரத்தில் சட்டரீதியாகவும் துறை ரீதியாகவும் நடவடிக்கைகளும் தொடரும்” என்றார்.

இர்பான் அரசியல் பின்புலத்தால் தப்பிக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘அரசியல் பின்புலத்தோடு தான் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது அரசு இருப்பதால் தான் இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது ஏற்கனவே அவர் செய்த தவறுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தார். ஆனால், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க சொல்லி கூறி இருக்கிறோம் காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றார்.

பிரபலமானவர்கள் மன்னிப்பு கேட்டால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற கேள்விக்கு, ‘ஸ்கேன் விவகாரத்தை பொருத்தமட்டிலும் தமிழகத்தில் மட்டும் தான் தடையே தவிர துபாயில் தடை இல்லை. அதனால் வெளியிட்டது தவறு என்பதற்கு தான் கடிதம் கொடுத்தோம். அதனை அவர் இங்கு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தை அப்போதே மூடியிருப்போம். தவறு செய்தவர்களை இந்த அரசு நிச்சயம் காப்பாற்ற முனையாது.!

ஸ்கேன் விவகாரம் தமிழகத்தில் நடக்கவில்லை துபாயில் நடந்துள்ளது துபாயில் அதற்கு தடை இல்லை விலக்கு உள்ளது. அதனால் அங்கு அதனை சொல்லிவிட்டார், அதனால் உடனடியாக நோட்டீஸ் கொடுத்து தவறு என மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் தொப்புள்கொடி விவகாரத்தை பொருத்தமட்டிலும் மன்னிப்பு கேட்டாலும் அவரை விட மாட்டோம். காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்க செய்ய கோரி துறையின் சார்பிலும் கடிதம் கொடுத்திருக்கிறோம்’ என்றார்.