தமிழ்நாடு

தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுக்க வேண்டும் – ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்

அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என ஆசிரியர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

 தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுக்க வேண்டும் – ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் மாநில அளவிலான அடைவு ஆய்வுக்கான மிளாய்வு கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள தலைமை ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

புது யுக்திகள்

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , “தகுதித்தேர்வு மற்றும் பிற தேர்வுகள் குறித்து ஆசிரியர்கள் கவலைப்பட தேவையில்லை. அவற்றை அரசு கவனித்து வருகிறதென்றும், ஆசிரியர்கள் மாணவர்களின் கனவுகளை உணர்ந்து, அவர்களது கல்வி வளர்ச்சிக்காக முழுமையாக பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும் வேலூர் மாவட்டம் கல்வியில் மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதற்காக பணியில் தலைமையாசிரியர்கள் ஈடுபட வேண்டும். கல்வி என்பது மிகச் சிறந்த ஆயுதம். ஒரு மாணவனுக்கு நல்ல கல்வியை கொடுத்துவிட்டால் அந்த மாணவன் ஏழேழு தலைமுறைக்கும் ஆசிரியர்களுக்கு நன்றியோடு இருப்பான்.

தலைமை ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்லூரி முதல்வர்களுடன் கலந்துரையாட வேண்டும். அவர்களிடம் புதுப்புது யுத்திகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு தோன்றும் புது யுக்திகளை அவர்களிடம் தெரிவித்து இப்படி கற்பிக்கலாமா என்பதை கேட்டு அது குறித்து அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கற்றல் திறன்

கல்வி என்பது இருட்டில் இருக்கும் ஒரு பிள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஒரு உன்னத பணியாகும். மாணவர்களுக்கு கற்றல் விளைவு சார்ந்து சொல்லிக் கொடுத்தால், மாநில அளவிலான அடைவு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்ணை பெறலாம்.ஒரு குழந்தை பல கனவுகளோடு உங்கள் பள்ளிக்கு வருகிறது. அவர்களுடைய கனவுகளை எப்படி நாம் நினைவாக்க போகிறோம் என்ற சிந்தனையோடு நாம் செயல்பட வேண்டும். அதற்கு ஏற்றார் போல் அவர்களை தயார் படுத்த வேண்டும். ஒரு மனிதனின் வெற்றிக்கு காரணம் அந்த மனிதனின் மனநிலைதான். ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் அனைத்து மாணவர்களையும் நல்ல நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற மனநிலையோடு கற்றல் விளைவு சார்ந்து அவர்களுக்கு கல்வியை போதிக்க வேண்டும்.

நல்ல அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க உங்கள் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு அறிவார்ந்த கற்றல் திறன்களை வழங்க வேண்டும். அதன் மூலம் தேர்வுகளில் நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுக்க வேண்டும்.

தேர்ச்சி விகிதம்

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 5 முதல் 10 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு உலகம் முழுவதும் சென்று பணியாற்றிக் கொண்டிருந்த நிலை மாறி தற்போது 1870 மாணாக்கர்கள் உலகம் முழுவதும் சென்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.