தமிழ்நாடு

மண்ணின் கீழ் மறைந்துள்ள வரலாறு.. ஆவணப்படுத்தும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்!

தென் தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷங்களை வெளிக் கொணரும் முயற்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை கடந்த சில ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

மண்ணின் கீழ் மறைந்துள்ள வரலாறு.. ஆவணப்படுத்தும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்!
மண்ணின் கீழ் மறைந்துள்ள வரலாறு.. ஆவணப்படுத்தும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்!
2021 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வு மையமாக தொடங்கப்பட்ட இப்பிரிவு, தொல்லியல் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் முதுகலை தொல்லியல் துறையாக மேம்படுத்தப்பட்டது. ஆர்வமுள்ள 25 மாணவர்களுடன் கடந்த 2023- 2024 கல்வி ஆண்டில் தொடங்கிய இத்துறை, குறுகிய காலத்திலேயே திருநெல்வேலி மாவட்டத்தில் பல பண்டைய கல்வெட்டுகளைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்தியுள்ளது.

இத்துறையின் மற்றுமொரு சிறப்பான முயற்சிதான் மாணவர்கள் தாங்களாகவே உருவாக்கியுள்ள தொல்பொருள் மினி அருங்காட்சியகம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்கள் சுமார் 3000 முதல் 4000 வரையிலான தொல்பொருள் எச்சங்களை சேகரித்து இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளனர். தற்போது புதுப்பொலிவுடன் தயாராக உள்ள இந்த அருங்காட்சியகம், பல்கலைக்கழக வேலை நாட்களில் பொதுமக்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்களின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் தொல்லியல் துறையின் மாணவ மாணவிகளின் அயராத உழைப்பின் சாட்சியாகும். பொதுமக்கள் அளித்த தாலி, பல்வேறு வகையான படிமங்கள், தென் மாவட்டத்தில் இரும்பு காலத்தில் பயன்பாட்டில் இருந்த இரும்பு உருக்கு ஆலையில் இருந்து சேகரிக்கப்பட்ட இரும்புப் பொருட்கள் என பல்வேறு அரிய தொல்பொருட்களை மாணவர்கள் காட்சிக்கு வைத்துள்ளனர்.

குறிப்பாக, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படிமமான மரங்கள் போன்ற அரிய படிமங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. மேலும், கற்காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய பல்வகை ஆயுதங்களையும், அவற்றின் மாதிரிகளையும் மாணவர்கள் காட்சிப்படுத்தி இருப்பது அவர்களின் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் பறைசாற்றுகிறது.

பல்கலைக்கழக அருங்காட்சியகங்கள் என்பவை வெறும் காட்சிப் பொருட்கள் நிறைந்த இடங்கள் மட்டுமல்ல; அவை கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றின் மையங்களாகும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சி, மாணவர்களுக்கு களப்பணி அனுபவத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நமது மண்ணின் தொன்மையை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய தளமாகவும் விளங்குகிறது.

சர்வதேச அருங்காட்சியக தினமான இந்நாளில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறையின் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் இந்த உன்னதமான முயற்சி பல்வேறு தரப்பினர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. தொல்லியல் ஆய்வில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு, நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையையும், நாகரிகத்தையும் அறிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.