தமிழ்நாடு

பேஸ்புக்கில் கார் விளம்பரம்.. ஸ்கெட்ச் போட்டு காரை திருடிய நபர் கைது

கும்பகோணம் அருகே காரை ஓட்டி பார்ப்பதாக கூறி திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேஸ்புக்கில் கார் விளம்பரம்.. ஸ்கெட்ச் போட்டு காரை திருடிய நபர் கைது
Man steals car after claiming to be test driving it
கோவை மாவட்டம், வால்பாறையைச் சேர்ந்த சக்திவேல் (26), தனது காரை விற்பனை செய்வதாக பேஸ்புக்கில் விளம்பரப்படுத்தியுள்ளார். இதைப்பார்த்த கும்பகோணம் சென்னியமங்கலத்தைச் சேர்ந்த வீரசெல்வம் (36), கார் வாங்கி விற்கும் நிறுவனம் நடத்துவதாகப் பொய் கூறி, ஒரு கார் நிறுவனத்தின் முன் நின்று செல்ஃபி எடுத்து சக்திவேலுக்கு அனுப்பியுள்ளார். தனது காரை கும்பகோணத்திற்கு கொண்டு வந்தால் வாங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

சக்திவேல் அவ்வளவு தூரம் காரை ஓட்டி வர முடியாது என்றும், திருப்பூர் வந்து காரைப் பார்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு வீரசெல்வம், டீசல் மற்றும் சுங்கச்சாவடி செலவுகளுக்காக ரூ.3,500 ஆன்லைன் மூலம் அனுப்புவதாகக் கூறி, காரை எடுத்து வரும்படி கூறியுள்ளார்.

இதை நம்பி சக்திவேல் கடந்த ஜூலை 20 அன்று காரை கும்பகோணத்திற்கு கொண்டு வந்துள்ளார். வீரசெல்வம், காரை சாக்கோட்டைக்கு கொண்டு வரச் சொல்லியுள்ளார். சக்திவேல் சாக்கோட்டை வந்ததும், கார் எப்படி இருக்கிறது என ஓட்டிப் பார்ப்பதாகக் கூறிய வீரசெல்வம், தனது நண்பரையும் காரில் உட்கார வைத்துக்கொண்டு முதல் சுற்றை முடித்துள்ளார். இரண்டாவது சுற்று ஓட்டிச் சென்ற வீரசெல்வம் திரும்பவே இல்லை.

பல மணி நேரம் காத்திருந்த சக்திவேல் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நேற்று வேறு ஒரு சம்பவத்திற்காக சாக்கோட்டை வந்த நாச்சியார்கோவில் காவல் நிலையத்தினர், கடைவீதியில் இருந்தபோது சக்திவேல் புகார் அளித்த கார் அவ்வழியே சென்றுள்ளது. இதைப் பார்த்த காவல்துறையினர், தங்கள் ஜீப்பில் மூன்று கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று காரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அது சக்திவேலிடம் திருடப்பட்ட கார் என்பது உறுதியானது. இதனையடுத்து காரை ஓட்டிச் சென்ற வீரசெல்வம் கைது செய்யப்பட்டார்.