தமிழ்நாடு

ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கு.. வெடிகுண்டு தயாரித்தவர் தற்கொலை!

ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்ற வழக்கில், வெடிகுண்டைத் தயாரித்த லட்சுமணன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.

ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கு.. வெடிகுண்டு தயாரித்தவர் தற்கொலை!
Ma.ka. Stalin's assassination attempt case
ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்ற வழக்கில், வெடிகுண்டைத் தயாரித்ததாக கூறப்படும் லட்சுமணன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை முயற்சி சம்பவம்

கடந்த செப்.5-ஆம் தேதி, பாமக மாநில நிர்வாகியும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க. ஸ்டாலின் தனது அலுவலகத்தில் இருந்தபோது, காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டை வீசியது. இந்தத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ம.க. ஸ்டாலின் உயிர் தப்பினார். எனினும், அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள் மற்றும் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

வெடிகுண்டு தயாரித்தவர் தற்கொலை

இந்தச் சூழலில், நாட்டு வெடிகுண்டை தயாரித்தவர் கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று (செப்.8) மாலை லட்சுமணனைப் பிடிக்க காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்றனர். அவர் ஊரில் இல்லாததால், அவரது மனைவி மதனா என்பவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

வேளாங்கண்ணி சென்று திரும்பிய லட்சுமணனுக்கு, தனது மனைவி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தகவல் தெரியவந்தது. இதனால் மனமுடைந்த அவர், தனது வீட்டிற்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, லட்சுமணன் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வழக்கில் சேலத்தைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், வெடிகுண்டு தயாரித்த லட்சுமணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.