தமிழ்நாடு

மதுர குலுங்க...குலுங்க...மே12ம் தேதி கள்ளழகர் சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

மதுர குலுங்க...குலுங்க...மே12ம் தேதி கள்ளழகர் சித்திரைத் திருவிழா
மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா

கள்ளழகர் சித்திரைத் திருவிழா

மதுரை மாவட்டத்தில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகவும், உலக பிரசித்திப் பெற்றதாகவும் சித்திரை திருவிழா கொண்டாப்பட்டு வருகின்றது.இதில் முக்கிய நிகழ்ச்சியாக கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்திப் பெற்றது. இதனை பல்லாயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் இருந்து கண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ந்து வருவார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா வரும் மே மாதம் 08ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வரும் 10ஆம் தேதி சுந்தரராச பெருமாள் என்று அழைக்கக்கூடிய கள்ளழகர் கண்டாங்கிபட்டுத்தி, வேல் மற்றும் வளரியுடன், தங்க பல்லக்கில் எழுந்தருளி மதுரை நோக்கி புறப்படும் நிகழ்ச்சியும், வரும் 11ஆம் தேதி மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சியும், அன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்று நோக்கி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

தங்க குதிரை வாகனத்தில்...

இதனைத்தொடர்ந்து, விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான, கள்ளழகர் தங்ககுதிரை வாகனத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் “கோவிந்தா... கோவிந்தா” கோஷத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 12ஆம் தேதி அதிகாலை 05.45 மணிமுதல் 06.05 மணிக்குள் நடைபெற உள்ளது.தொடர்ந்து, 13ஆம் தேதி தங்க கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளி மண்டுக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சியும், 14ஆம் தேதி தல்லாகுளம் மன்னர்சேதுபதி மண்டபத்தில் பூ பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இதனைத்தொடர்ந்து, மதுரையில் இருந்து இருப்பிடமான அழகர் கோவிலுக்கு புறப்படும் கள்ளழகர். 16ஆம் தேதி காலை 10.00 மணியளவில் திருக்கோயிலுக்கு வந்தையடைய உள்ளார். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளது. வரும் 17ஆம் தேதி உற்சவர் சாற்று முறையுடன் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவடைய உள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் துணை ஆணைய யக்ஞநாராயணன் மற்றும் அறங்காவலர் குழுவினர் அறிவித்துள்ளனர்.